×

பயிர் இன்சூரன்ஸ் தொகை குறைவு காளையார்கோவில் விவசாயிகள் மறியல் 2 பேர் மயங்கியதால் பரபரப்பு

காளையார்கோவில், ஜன.9:  காளையார்கோவில் பகுதியில் கருகிய பயிர்களுக்கு குறைந்த அளவு பயிர் இன்சூரன்ஸ் தொகை அறிவித்ததை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. காளையார்கோவில் பகுதியில் இந்த வருடமும் போதிய மழை பெய்யாததால் நெல் விவசாயம் முற்றிலும் பொய்த்துவிட்டது. பயிர்கள் கருகிவிட்டன. இதனிடையே 2017-2018ம் ஆண்டில் பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு குறைந்த சதவிகித இழப்பீடு அறிவித்ததை கண்டித்தும், 100 சதவீத இழப்பீடு வாங்கக்கோரியும் விவசாயிகள் சங்கம் சார்பில் காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் நடைபெற்றது. மறியலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கோபால், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளர் திருச்செல்வம், வடக்கு ஒன்றிய  செயலாளர் முருகேசன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் உடையார், செயலாளர்  முனியாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கடும் வெயிலில் சாலைமறியலில் ஈடுபட்ட  முடிதானை கிராமத்தை சேர்ந்த வீரம்மாள் என்ற மூதாட்டியும், அஞ்சாம்பட்டி  கிராமத்தை சேர்ந்த இருளாயி என்கிற மூதாட்டியும் மயக்கம் அடைந்தனர். அவர்களை  ஆம்புலன்ஸ் மூலம் அருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்பு வட்டாட்சியர் பாலகுரு, சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் அப்துல்கபூர், காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 9ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் தனியார் காப்பீட்டு நிறுவன அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று  உறுதி அளித்தனர். இதன் பின்பு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED வெப்பம் தணித்த கோடை மழை