×

செய்யூர் அருகே 4 மாதத்திற்கு முன் மாயமான நரிக்குறவ பெண்ணின் குழந்தை திருப்போரூரில் மீட்பு

சென்னை, ஜன. 9:செய்யூர் அருகே கடந்த 4 மாதத்துக்கு முன்பு கடத்தப்பட்ட குழந்தையை ேபாலீசார் அதிரடியாக மீட்டனர். கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.  காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கூட்டுரோடு பகுதியில் ஏராளமான நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதியினர் இருவரும் மாமல்லபுரம், திருப்போரூர் போன்ற கோயில் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு சென்று அங்கேயே தங்கி பாசி மணி, சங்குமாலை விற்று வந்தனர்.  இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி செய்யூர் அருகே நடந்த கோயில் திருவிழா ஒன்றில் வியாபாரத்தை முடித்து விட்டு அணைக்கட்டு கிராமத்தில் இரவு தங்கினர்.

அதிகாலையில் விழித்துப் பார்த்தபோது தங்களுடன் உறங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை ஹரிணியை காணாமல் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன குழந்தையை தேடி வந்தனர். மேலும், துண்டு பிரசுரம் மூலம் குழந்தையின் படத்தைப் போட்டு விளம்பரமும் செய்து வந்தனர்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஹரிணியின் தந்தை வெங்கடேசனுக்கு போன் செய்த மதுரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குழந்தை ஹரிணி தன்னிடம் இருப்பதாகவும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் குழந்தையை ஒப்படைப்பதாகவும் மிரட்டினார். இதையடுத்து போலீசார் வெங்கடேசனை அழைத்துக் கொண்டு மதுரை சென்று அந்த தொலைபேசி எண்ணில் பேசிய ராஜேஸ்வரன் என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் பணம் பிடுங்கும் ஆசையில் போன் செய்தது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.   

இதற்கிடையே, ஹரிணி போன்று குழந்தை ஒன்று கொல்கத்தாவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து காஞ்சிபுரம் தனிப்படை பிரிவு எஸ்.ஐ. பிரேம் தலைமையில் போலீசார் வெங்கடேசனை விமானம் மூலம் கொல்கத்தா அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு இருந்த குழந்தை ஹரிணி இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த டீம் மீண்டும் காஞ்சிபுரத்திற்கு திரும்பியது.
மேலும், பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கும் நரிக்குறவ பெண் குழந்தை காணாமல் போனது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிலர் இந்த குழந்தையின் படத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தனர். இதே மாதிரி குழந்தை ஒன்று மும்பையில் இருப்பதாக வந்த தகவலையடுத்து குழந்தையின் பெற்றோரிடம் லதா ரஜினிகாந்த் போனில் பேசியதாகவும், மும்பையில் இருக்கும் குழந்தை ஹரிணியை மீட்க உதவுவதாகவும் செய்திகள் வெளியாகின.

மேலும், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையர் ஆனந்தன் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேரடியாக விசிட் செய்து காணாமல் போன குழந்தை ஹரிணியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு குழந்தையை கண்டுபிடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து குழந்தையை தேடும் பணி விறுவிறுப்படைந்தது. இந்நிலையில் குழந்தை காணாமல் போன அன்று அப்பகுதியில் இருந்த பல்வேறு சி.சி.டி.வி. காட்சிகள் மீண்டும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன. இதில் கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலம் பகுதியைச் சேர்ந்த வசந்த்ராஜ் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாதாரண உடையில் வசந்த்ராஜை கண்காணிக்க ஆரம்பித்தனர். அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே வசந்த்ராஜை நேற்று முன்தினம் பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், குழந்தையை தான் கடத்தியதை ஒப்புக் கொண்ட வசந்த்ராஜ் அந்த குழந்தை ஹரிணியை திருப்போரூர் அருகே குழந்தை இல்லாத தம்பதியிடம் விற்று விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து நேற்று அதிகாலை திருப்போரூர் சென்ற சிறப்பு படை போலீசார் தண்டலம் கிராமம், அண்ணா நகரில் இருந்த தாஸ் மற்றும் சங்கீதா தம்பதியினரின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் குழந்தை ஹரிணி இருந்தது தெரிய வந்தது. தங்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என்றும், அதனால் தெரிந்தவர்களிடம் சொல்லி இந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்ததாகவும், இது திருடப்பட்ட குழந்தை என்று தெரியாது என்றும் கூறி கதறி அழுதனர்.பின்னர், போலீசார் அவர்களிடம்  குழந்தை இல்லை எனில் மருத்துவ சிகிச்சை மூலம் குழந்தை பெற முயற்சிக்க வேண்டும் அறிவுரை வழங்கினர்.

அங்கு குழந்தையின் பெற்றோர் வெங்கடேசன் மற்றும் காளியம்மாள் தம்பதியினர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி குழந்தையை ஒப்படைத்தார். குழந்தை ஹரிணியை பார்த்ததும் அதன் பெற்றோர் ஆனந்தத்தில் அழுது கண்ணீர் விட்ட காட்சி போலீசாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தையை கண்டு பிடித்ததற்காக குழந்தையின் தந்தை வெங்கடேசன் மாவட்ட போலீஸ் எஸ்.பி.யின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.  
   
இதனிடையே அணைக்கட்டு கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியிடம் குழந்தையை திருடிய கல்பாக்கம் அடுத்த பூந்தண்டலத்தைச் சேர்ந்த வசந்த்ராஜ் மற்றும் குழந்தையை வளர்ப்பதாக சொல்லி வைத்திருந்த திருப்போரூரைச் சேர்ந்த சங்கீதா ஆகியோரை அணைக்கட்டு போலீசார் கைது செய்து மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், குழந்தையை கடத்த உதவிய வீரமணி, பிரகாஷ் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Tags : baby girl ,Cheyur ,Thirpopuram ,
× RELATED மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு