×

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயற்கை வைரம் பட்டை தீட்டும் தொழில் கடும் பாதிப்பு

புதுக்கோட்டை, ஜன.8: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் செயற்கை வைரம் தயாரிக்கும் தொழில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டி பறந்தது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட செயற்கை வைரங்கள் தமிழகம் மட்டுமல்லாது உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இலுப்பூர் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வீடு வீடாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த தொழிலில் ஈடுபட்டு பலர் பெரும் செல்வந்தர்கள் ஆனாவர்களும் உண்டு. இப்பகுதிகளில் பல கிராமங்களில் குடிசை தொழிலாகவும் இருந்து வந்தது. இங்கு தயாரிக்கப்படும் செயற்கை வைரத்தை தங்கம், வெள்ளி நகைகள், கைக் கடிகாரம், காலணிகள், மேலாடை மற்றும் கைவினைப்பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. பல ஊர்களில் தயாரிக்கப்படும் செயற்கை வைரங்களை கொள்முதல் இலுப்பூரில் சிலர் கொள்முதல் செய்து  திருச்சி பெரிய கடைவீதி பகுகளில் உள்ள டைமன் பஜார் பகுதியில் விற்பனை செய்யப்பட்டது. 1991ம் ஆண்டுக்கு பிறகு, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கையினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் கியூபிக் ஜெர்கான், குறைந்த விலையில் கிடைக்கும் சீனா வைரக் கற்கள் சந்தையில் அதிகம் கிடைக்க ஆரம்பித்தன.

இதற்கான வரி 36 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டு, சிலவற்றிற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. இந்த செயற்கை வைரக் கற்கள், டெல்லி, மும்பை, புனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஐதராபாத், சென்னை, கோவை, பெங்களூர், மைசூர் ஆகிய நகரங்களில் நேரடியாக இறக்கமதி செய்யப்படுகின்றன. இதனால் உள்ளூரில் தயாரிக்கப்படும் செயற்கை வைரத்திற்கான விற்பனை வெகுவாக குறையத் தொடங்கின. இந்தியாவில் தயாரிக்கப்படும் நகைகளுக்கு 90 சதவீதம் வரை கியூபிக் ஜெர்கான் வைரக் கற்களையே பயன்படுத்துகின்றனர். இதனால், கடந்த 10 ஆண்டுகளாக உள்ளூரில் செயற்கை வைர தொழில் படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் செயற்கை வைரம் பட்டை தீட்டும் பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. தொழில் தெரிந்த பலர் வேறு தொழிலுக்கு மாறி விட்டனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சம் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. அன்னிய செலாவணி இழப்பு உள்ளிட்ட பாதிப்புகளும் தொடர்கின்றன.

எனவே உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயற்கை வைர சந்தைக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தித் தர தயாரிப்பாளர்கள் வலியுறுத்துகின்றனர். இதுகுறித்து செயற்கை வைர பட்டைதீட்டும் தொழிலாளர்கள் கூறியதாவது:  சீனா செயற்கை வைர இறக்குமதியால் உள்நாட்டு செயற்கை வைர தொழில் வீழ்ச்சியடைந்து விட்டது. இலுப்பூர் பகுதியில் பல கிராமங்களில் இந்த தொழில் நடைபெற்றது. ஆனால் தற்போது இந்த தொழில் முற்றிலும் நலிவடைந்துவிட்டது. தற்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இலுப்பூர் பகுதியில் உற்பத்தி செய்யப்பபடும் செயற்கை கற்களை விற்பனை செய்ய  திருச்சி டைமன்ட் பஜாரிலியே கடைகள் குறைந்துவிட்டது. எனவே சீனா உள்ளிட்ட வெளிநாட்டு செயற்கை வைர இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். செயற்கை வைர தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு, குறைந்த பட்ச கூலி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொழில் மேம்பாடு ஏற்படும் வகையில், செயற்கை வைர தொழிலுக்கு ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். அதி நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து உற்பத்தியைப் பெருக்க, தொழில் மேம்பாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தியும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவே இல்லை என்றனர்.
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Tags : Pudukkottai district ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...