கரூர்: கரூர் மாவட்டத்தில் 2.99லட்சம் ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் சிறப்பு தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
கரூர் ஆண்டாங்கோயில் புதுார், வெங்கமேடு, ஆச்சிமங்கலம், ராயனுார், வீரராக்கியம் ரேசன் கடைகளில் ரேசன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை போக்கு வரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர், டிஆர்ஓ சூர்ய பிரகாஷ் தலைமையில் வழங்கினார். அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: இந்த ஆண்டு பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் தலா ரூ.1000 வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 584 நியாய விலைக் கடைகளிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், உள்ள 2,99,440 அட்டை களுக்கு வழங்கப்பட உள்ளது.ரூ.1000 மற்றும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு என மொத்தம் ரூ.33கோடியே 73லட்சத்து 19ஆயிரத்து 160 மதிப்பில் வழங்கப்பட உள்ளது. அனைத்து ரேஷன் கடை களிலும் தொடர்ந்து வழங்கப்படும் என்றார். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கீதா, கூட்டுறவு இணைப்பதிவாளர் சீனிவாசன், நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் மல்லிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
