×

மணவாளநல்லூர் மாட்டுவண்டி மணல் குவாரியில் தொழிலாளர்கள் போராட்டம்

விருத்தாசலம், ஜன. 8: விருத்தாசலம் அருகே மணவாளநல்லூர் அரசு மணல் குவாரியில் ஆன்லைன் முறையை தடை செய்யக்கோரி மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களின் நலன் கருதி, விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் மணிமுக்தாற்றில் பொதுப்பணித் துறையின் மூலம் நேற்று மாட்டுவண்டி மணல் குவாரி தொடங்கப்பட்டது. மணல் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பின்பு அவர்களுக்கு செல்போன் வழியாக வரும் குறுந்தகவல் மூலம் மணல் அள்ள அனுமதி வாங்கி மணல் எடுத்து கொண்டு செல்ல வேண்டும்.மேலும் ஒருநாள் எடுத்தவர் மறுநாள் எடுக்கக் கூடாது, அதற்கு அடுத்த நாள்தான் மணல் அள்ள வேண்டும் என்ற விதிமுறைகளுக்கு உட்பட்டும், தினமும் சரியாக 243 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் எனக் கூறியும் மணல் குவாரி துவங்கப்பட்டது. ஆனால் குறுந்தகவல் எதுவும் வராமலேயே சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் தொழிலாளர்கள் நேற்று காலை ஆற்றுக்குள் இறங்கி மணல் அள்ளிக் கொண்டு வெளியே சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் குறுந்தகவல் உள்ளவர்கள் மட்டும்தான் மணல் அள்ள முடியும் மற்றவர்கள் அள்ளக்கூடாது, எனவே மணலை கொட்டி விட்டு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த மாட்டுவண்டி தொழிலாளர்கள், மாட்டு வண்டிகளை உள்ளேயே நிறுத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் கூறுகையில், பழைய நிலையிலேயே மாட்டுவண்டி மணல் குவாரி நடத்த வேண்டும், தினமும் எழுத்து முறையிலேயே சீட்டு போட வேண்டும் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலாஜி, வருவாய்த்துறை மண்டல துணை வட்டாட்சியர் முருகன், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சம்பந்தப்பட்ட துறையின் உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதற்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்று அதன்படி மணல் குவாரி நடத்தினால்தான் விடுவோம், இல்லையென்றால் மணல் குவாரியை நடத்த விட மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இருப்பினும் தொடர்ந்து அதிகாரிகள் கூறியதை மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் குவாரி திறக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அள்ளிய மணலை மாட்டுவண்டி தொழிலாளர்கள் அனைவரும் அங்கேயே கொட்டிவிட்டு வண்டிகளை எடுத்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED விருத்தாசலம் அருகே பரபரப்பு ரயிலில்...