×

பாலக்காட்டில் பந்த் பா.ஜ.,-மா.கம்யூ., தொண்டர்கள் மோதல்

 பாலக்காடு, ஜன.4: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்ததை கண்டித்து நேற்று கேரளா முழுவதும் பந்த் நடந்தது. பாலக்காட்டில் பந்தின் போது பாஜ., தொண்டர்கள் மா.கம்யூ., அலுவலத்தை முற்றுகையிட சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் கோழிக்கோட்டைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் நேற்று முன்தினம் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து பா.ஜ., மற்றும் சபரிமலை ஐயப்ப கர்ம சமிதி சார்பில் நேற்று பந்த் அனுசரிக்கப்பட்டது.இதனால் பாலக்காட்டில் தனியார் மற்றும் அரசு பஸ்கள், ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகனங்களின் இயக்கப்படவில்லை. மேலும், கடைகள், வணிகவளாகங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.முழு அடைப்பு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும்  பாலக்காடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கோவை, பொள்ளாச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், ஆகிய இடங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயங்கவில்லை. பாலக்காடு காய்கறி மார்கெட், பெரிகடைவீதி, மீன் மார்கெட்  உள்ளிட்டவைகளும் மூடப்பட்டன.

இதற்கிடையே பா.ஜ., கட்சியினர், மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கேரள முதல்வர் பிணராயி விஜயன் அரசு ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். பாலக்காடு-கோவை சாலையிலுள்ள மின்வாரிய பங்களாவில் கலாச்சாரத்துறை, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் தங்கியிருந்ததை தெரிந்து கொண்ட பா.ஜ., தொண்டர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.  இதனால் மாவட்ட எஸ்.பி., தெபேஸ்குமார் தலைமையில் போலீசார் தடியடி நடத்தினர். அப்போது போலீசார் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டது.  இதில்  சில பத்திரிக்கை நிருபர்கள், டி.வி., சேனல் கேமிராமேன்கள், போலீசார் காயமடைந்தனர். இதற்கிடையே பாலக்காட்டில் பா.ஜ.,  தொண்டர்கள் நேற்று காலை பேரணியாக சென்று மா.கம்யூ., மாவட்ட அலுவலகம் முன்  நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து அலுவலகம் மீது கல்வீசி  தாக்குதல் நடத்தினர். இதனால் இரண்டு கட்சி தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.  இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

 இதைத்தொடர்ந்து  நேற்று மா.கம்யூ., தொண்டர்கள் பேரணியாக சென்று பா.ஜ., மாவட்ட அலுவலகத்தில்  வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்து சேதப்படுத்தினர். இதனால் பந்த்  முடிந்த பின்னரும் பாலக்காட்டில் பஸ் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இந்த  இருகட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஏராளமான  போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே செய்தியாளர்களிடம் ேபசிய  பாலக்காடு எஸ்.பி. தெபேஸ்குமார் வன்முறையை தூண்டும் விதமாக நடந்து  கொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Tags : Pant BJP ,volunteers ,Palakkad ,
× RELATED குழல்மந்தம் அருகே தேர்தல் விதிகளை மீறி மது விற்பனை செய்த பெண் கைது