×

காளையார்கோவிலில் கழிவுநீர் வழிந்தோட வழி இல்லை பெருகும் கொசுக்களால் பரவுது நோய்

காளையார்கோவில், ஜன. 4:  காளையார்கோவில் பகுதி கால்வாய்களில் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பல்கிபெருகி நோய்கள் பரவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காளையார்கோவில் பகுதியில் 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் சில தெருக்களில் மட்டும்தான் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. ஊராட்சி நிர்வாகம் அவற்றையும் முறையாக பராமரிக்காமல் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. சில இடங்களில் கால்வாய்கள் உடைந்த நிலையில் காணப்படுகின்றன. இன்னும் சில இடங்களில் கால்வாய் இருந்த தடமே இல்லாமல் மண்ணை கொட்டி மூடி விட்டனர். இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாய்களில் மாதக்கணக்காக தேங்கியும், சாலைகளில் குளம்போல் தேங்கியும் காணப்படுகிறது.

இதேபோல் கடந்த 2012ம் ஆண்டில் பல கோடி செலவில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணிகள் துவங்கின. ஆனால் தற்போது இப்பணிகள் முழுமை பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதில் வீடு, கடைகளில் இருந்து குப்பைகளை கொட்டுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்களும் பல்கி பெருகி நோயை பரப்பி வருகின்றன. குறிப்பாக பழைய டிவிஎஸ் கம்பெனி பின்புறம் உள்ள கஸ்தூரிபாய் தெருவில் இந்த அவலம் அதிகமாக உள்ளது. இப்பகுதி பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி வருகின்றன. மருந்தும் அடிக்காததால் இரவில் கொசுக்கள் வெளியேறி கடிப்பதால் தொற்றுநோய் பரவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய்களில் கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுப்பதுடன், கிடப்பில் போடப்பட்ட மழைநீர் வடிகால் வாயக்கால் திட்டத்தையும் துவங்கி விரைந்து முடிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags :
× RELATED டூவீலர்கள் மோதல் சிறுவன் பலி; இருவர் படுகாயம்