×

செந்துறை பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

செந்துறை, டிச. 28: செந்துறை பகுதியில் முள்ளங்கி விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் மானாவாரி பயிரை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஆழ்குழாய் கிணறு மூலம் தோட்டப்பயிர் சாகுபடி செய்கின்றனர். மருவத்தூர் கிராமத்தில் செம்மண் நிலத்தில் சொட்டுநீர் பாசனம் மூலம் முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர்.மலைச்சரிவான பகுதிகளில் அதிக விளைச்சல் தரும் முள்ளங்கி, செம்மண் நிலத்திலும் 40 நாட்களில் நல்ல மகசூலை எட்டியுள்ளது. ஆனால், இதைக்கொண்டு சென்று சந்தைப்படுத்தலில் விவசாயிகளுக்கு சிரமம் உள்ளது. வியாபாரிகள் வாங்கும் விலையானது அறுவடை கூலி, வாகன செலவுக்கே போதவில்லையென விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி சங்கர் கூறுகையில், முள்ளங்கி நன்றாக விளைந்துள்ளது. இதை விற்பனை செய்ய கும்பகோணம், அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிக்கு கொண்டு சென்று மொத்த கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்கையில் கிலோ 5 அல்லது 6 ரூபாய்க்கு எடுக்கின்றனர்.இது விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.   

இதே விலையில் விளைந்த இடத்துக்கே வந்து எடுக்க வேண்டும் அல்லது கிலோவுக்கு ரூ.10  அளித்தால் போதுமானதாக இருக்கும். மொத்த கொள்முதல் நிலையங்களில் ரூ.5க்கு பெற்று சில்லரை விற்பனையாளர்களிடம் ரூ.8, ரூ.10க்கும், சில்லரை விற்பனையாளர்கள் 20, 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து விவசாயம் செய்யலாமா, வேண்டாமா என்ற நிலை இருந்து வருகிறது.  அரசு தோட்டக்கலைதுறை மூலம் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் நேரடி தொடர்பை உருவாக்கினால் விவசாயிகள் சாகுபடி செய்யும் கத்தரி, முள்ளங்கி உள்ளிட்ட தோட்ட பயிர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் வியாபாரிகள் நேரடி கொள்முதல் செய்வதால் குறைந்த விலையில் வாங்கி பொதுமக்களிடம் குறைந்த விலையில் விற்பனை செய்வர்.இதனால் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அனைவருக்கும் லாபம் கிடைக்கும். விவசாயிகளும் ஆர்வமுடன் அதிகளவில் தோட்டப்பயிர் செய்ய முன்வருவர் என்றார்.

Tags : Jaffna ,
× RELATED 8 தமிழர்களை கொன்றவருக்கு மன்னிப்பு...