×

ராசிபுரம் நகராட்சியில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ராசிபுரம், டிச.28: ராசிபுரம் நகராட்சியில், கூட்டு குடிநீர் திட்ட குழாழில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாவதால், தண்ணீரின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், இடைப்பாடி தாலுகா பகுதிகள், மகுடஞ்சாவடி, காகாபாளையம், கண்டர்குலமாணிக்கம், ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் மற்றும்  ராசிபுரம் நகராட்சியில் வசிக்கும் 10 லட்சம் மக்களுக்கு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் சேலம் மாவட்டம் புங்கனேரி, நைனாம்பட்டி, யூனியன்ஆபிஸ், நாச்சூர்கேட்டுக்கடை, ரங்கம்பாளையம் ஆகிய கிராமங்களில் 16 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணானது.

இதையடுத்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பிரதான குழாயில் உள்ள உடைப்புகளை கடந்த வாரம் சீரமைத்தனர்.  இந்நிலையில், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே சாலையில் குடிநீர் குழாய் உடைந்து, பல வாரங்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் தினமும் சென்று வரும் வழியில் உள்ள குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காதது, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : municipality ,Rasipuram ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து