×

மாவட்ட நிர்வாகம் தகவல் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் கலெக்டர் ஆய்வு

ராமநாதபுரம், டிச.28: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் ரத்த வங்கிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. அதன்படி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியை கலெக்டர் வீர ராகவராவ் நேற்று திடீரென ஆய்வு செய்தார். ஆய்வின் போது ரத்தம் எடுப்பது, சேமித்து வைக்கும் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் அவைகளை பராமரிக்கும் முறைகள் கொடையாளர்கள் தனியாக, குழுவாக ரத்தம் கொடுத்தது பற்றிய விபரங்கள் அடங்கிய ரிஜிஸ்டர்களை ஆய்வு நடத்தினார். ரத்த கொடையாளர்கள் விவரங்கள் மற்றும் சிகிச்சைக்காக ரத்தம் கொடுத்த விபரங்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என கேட்டறிந்தார்.

இதுபற்றி கலெக்டர் கூறுகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கியில் ரத்த சேமிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது 66 யூனிட் ரத்தம் உள்ளது. அதிகபட்டசமாக 600 யூனிட் ரத்தம் இங்குள்ள ரத்த வங்கியில் சேமித்து வைக்க முடியும். நடைமுறையில் உள்ள ரிஜிஸ்டர்களை முறையாக பராமரிக்கவும் கொடையாளர்களின் ரத்தத்தை முறையாக பரிசோதனை செய்து அடுத்தவர்களுக்கு ஏற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின் போது இணை இயக்குனர் முல்லைக்கொடி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவகர்லால் மற்றும் ரத்தவங்கி ஊழியர்கள் உடனிருந்தனர்.

Tags : Collector ,Blood Bank ,State Government Hospital ,
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...