×

திருப்பூரில் தொடரும் குற்றச்சம்பவங்கள்

திருப்பூர், டிச.25: திருப்பூரில் கொலை, கொள்ளை, வழிப்பறி என தொடர்ந்து நடைபெற்று வரும் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பனியன் நகரமான திருப்பூரில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதில் சுமார் 3 லட்சம் பேர் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதனால் திருப்பூர் நகரம் இட நெருக்கடியால் தவித்து வருகிறது. திருப்பூருக்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கிறார்கள். வெளியூர்களில் கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் குற்றவாளிகள் திருப்பூரில் தஞ்சம் அடைவதாக தெரியவந்துள்ளது. திருப்பூர் வரும் குற்றவாளிகள் பனியன் நிறுவனங்களில் வேலையை தேடி கொள்கிறார்கள். திருப்பூரில் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் புதிதாக வீடை வாடகைக்கு கேட்டு வருபவர்களிடம் அவர்களிடம் எந்த ஊர், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கூட விசாரிப்பதில்லை.  இவர்கள் கேட்கும் வாடகையை கொடுக்க அவர்கள் தயாராக இருந்தால் உடனடியாக வீட்டை வாடகைக்கு விட்டு விடுகிறார்கள். இதனால் அவர்கள் வெளியூர்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு திருப்பூரில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் கைவரிசைகளை பனியன் நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே திருப்பூரிலும் காட்டி வருகிறார்கள்.

 இதனால் சமீப காலமாக திருப்பூரில் அதிக அளவில் கொள்ளை, கொலைகள், விபசாரம், சூதாட்டம், இரு சக்கர வாகன திருட்டு ஆகியவை சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. பெரும்பாலான குற்றவாளிகள் திருப்பூரின் புறநகர பகுதிகளான வேலம்பாளையம், வஞ்சிபாளையம், கஞ்சம்பாளையம், பாண்டியன்நகர், போயம்பாளையம், மங்கலம், முதலிபாளையம் உள்ளிட்ட இடங்களிலேயே பெரும்பாலும் பதுங்கிகொண்டு தீவிரவாத செயல்களிலும், திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
 இந்நிலையில் கடந்த ஓராண்டாக திருப்பூரில் சர்வசாதாரணமாக கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவை அதிக அளவில் நடந்து வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. இதில் சில வழக்குகளில் கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர். சில வழக்குகளில் கொலையான நபரை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

உதாரணமாக சமீபத்தில், அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த விவசாயி கொலை வழக்கில், இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், நேற்று குமரன் ரோட்டில், பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில், நடந்த ஜோசியர் குமார் கொலை, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இதேபோல் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை என நாளுக்கு நாள் திருட்டுகளும் அதிகரித்து வருகிறது. ஆகவே மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், மாநகர போலீஸ் கமிஷனர் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Prosecutions ,Tirupur ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...