×

நெற்பயிர்களை தாக்கும் இலை சுருட்டுப்புழு, ஆனைக்கொம்பன் நோய்கள்

புவனகிரி, டிச. 25: பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்
பயிரில் இலை சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இதனால் இலைகள் நீள வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் இருக்கும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு புழுக்கள் அதனுள்ளே இருக்கும். இவற்றை கட்டுப்
படுத்த ஒரு ஏக்கருக்கு 400 மில்லி பெனிட்ரோதியான் அல்லது 400 மில்லி மானோகுரோட்டோபாஸ் அல்லது 100 மில்லி டைகுளோர்வாஸ் பயன்படுத்தலாம். ஆனைக்கொம்பன் நோய் தாக்குதல் என்பது, புழுக்கள் உண்டாகி வளரும் தூர்களை தாக்குகிறது. தாக்கப்பட்ட தூர்கள் வெங்காய இலை அல்லது வெள்ளி தண்டு போல் காட்சியளிக்கும். நோய் தாக்குதலுக்குள்ளான தூர்களில் நெற்கதிர்கள் வளராது. இவையே இந்த நோய்த்தாக்குதலின் அறிகுறிகள் ஆகும். இந்த நோய் தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 400 மில்லி பெனிட்ரோதியான் அல்லது 200 மில்லி பென்தியானை பயன்படுத்தலாம். மேலும் தழைச்சத்து (யூரியா) உரத்தினை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விளக்கு பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இந்த தகவலை பரங்கிப்பேட்டை வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ஐடி ஊழியர் வீட்டை உடைத்து ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை