×

வாடிப்பட்டி பகுதியில் வேட்டைக்காக வைக்கும் வெடியில் சிக்கி உயிரிழக்கும் கால்நடைகள்

வாடிப்பட்டி, டிச. 21: வாடிப்பட்டி பகுதியில் வனவிலங்குகள் வேட்டைக்காக வைக்கும் வெடியில் சிக்கி கால்நடைகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன. தொடரும் பலிக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாடிப்பட்டி அருகே கச்சைக்கட்டியில் அமைந்துள்ளது வகுத்துமலை. இம்மலை அடிவார பகுதிகளில் கச்சைக்கட்டி, ராமையன்பட்டி உள்ளிட்ட கிராமமக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். சமீபகாலமாக மலைப்பகுதியில் வாழும் காட்டுப்பன்றி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் சிலர் பணம்பழத்தில் வெங்காய வெடியை மறைத்து வைத்து சென்று விடுகின்றனர். இதனை பழம் என நினைத்து கடிக்கும் வனவிலங்குகள் வெடித்து சிதறி இறந்துவிடும். பின்னர் அவற்றை மர்மக்கும்பல் இறைச்சிக்காக எடுத்து சென்று விடுகின்றனர். ஆனால் இதனை மேய்ச்சலுக்கு அழைத்து வரப்படும் கால்நடைகளும் தின்று இறப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

நேற்று கச்சைக்கட்டி பெருமாள்நகரை சேர்ந்த பொன்னர் என்பவர் தனது உழவு மாட்டினை மேய்ச்சலக்காக வகுத்துமலை அடிவாரத்தில் உள்ள தனது காட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு மாடு மேய்ந்தபோது வனவிலங்கு வேட்டைக்காக வைத்திருந்த  பணம்பழத்தினை கடித்து விட்டது. இதில் வெடி வெடித்து மாடு தூக்கிவீசப்பட்டு வாய் பகுதி முற்றிலும் கிழிந்தது. உயிருக்கான ஆபத்தான நிலையில் மாட்டினை ஊருக்குள் கொண்டு வந்த பொன்னர் இதுகுறித்து வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். ஆனால் அதற்கும் மாடு பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து போலீசார் கிராம இளைஞர்கள் உதவியோடு அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் வனவிலங்குகள் வேட்டைக்காக வைத்திருந்த மேலும் 8 வெடிகளை கண்டுபிடித்து கைப்பற்றினர். வேட்டைக்காக வெடியை பதுக்கியவர்கள் யார், மேலும் வேறு இடங்களில் வெடி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கடந்த சில வாங்களுக்கு முன்பு செம்மினிபட்டி கிராமத்தில் வனவிலங்கு வேட்டைக்காக வெடியை கடித்ததில் அழகர்கோவிலுக்கு சொந்தமான பசுமாடு படுகாயமடைந்து பலியானது. நேற்றும் வெடியால் மற்றொரு மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.



Tags : wail area ,
× RELATED வாடிப்பட்டி பகுதியில் வேட்டைக்காக...