×

செடிகள் முளைத்து புதர்மண்டிய சரபங்கா ஆற்றின் தடுப்பணை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

ஓமலூர், டிச. 19: ஓமலூர் சரபங்கா ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியில், நகரின் ஒட்டுமொத்த கழிவுநீர் தேங்கி செடிகள் முளைத்து புதர் மண்டியுள்ளது. இதை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் சேர்வராயன் மலையில் சரபங்கா ஆறு  உற்பத்தியாகிறது. இந்த ஆறு டேனிஸ்பேட்டை, சர்க்கரைசெட்டிப்பட்டி, ஓமலூர்,  தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இடைப்பாடி வழியாக சென்று தேவூரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. கடந்த 20  ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றில் எப்போதும் தண்ணீர் ஓடிகொண்டே இருந்தது.  இதனால், சரபங்கா ஆற்று தண்ணீரை கொண்டு ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம்,  சின்னப்பம்பட்டி, இடைப்பாடி பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுவந்தன.

நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் அனைத்து  வகை சிறு தானியங்கள், பருப்பு வகைளை விவசாயிகள் பயிரிட்டனர். ஆனால், தற்போது ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கிய சரபங்கா ஆறு சுருங்கி வாய்க்கால் போல் மாறிவிட்டது. ஓமலூரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு சரபங்கா ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. ஆற்றில் வெள்ளபெருக்கு  ஏற்படும் போதெல்லாம், தடுப்பணையில் தண்ணீர் முழுமையாக தேக்கி வைக்கப்படும். ஆனால், தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் தடுப்பணையின் இருபக்க மதகுகளும் உடைந்துவிட்டது.  ஆற்றில் தண்ணீருக்கு பதிலாக, ஓமலூர் நகரின் ஒட்டு மொத்த கழிவுநீரும், அணை முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள்  தேங்கியுள்ளது. மரம், செடிகள் முளைத்து புதர்மண்டி அணை தூர்ந்து போய்விட்டது. இதனால், சரபங்கா ஆறு தற்போது சாக்கடை வாய்க்காலாக  மாறியுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், சரபங்கா ஆற்றின் தடுப்பணை பகுதியில் ஆய்வு நடத்தி மரம், செடிகளை அகற்றி, இருகரை மதகுகளை வலுப்படுத்தி, தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Putharamundiya Sarabanga River ,plants ,
× RELATED பீட்ரூட் கீரை மசியல்