×

குறித்த நேரத்தில் கிராமங்களுக்கு சென்று மாணவர்கள் பணியாற்ற வேண்டும் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் வேண்டுகோள்

நாமக்கல், டிச.19:  நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில், 4ம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் கால்நடை மருத்துவமனை மற்றும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை பயிற்சி பெற உள்ளனர். இதற்காக அவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி, நேற்று கால்நடை மருத்துவகல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மோகன், மாணவ, மாணவிகளுக்கு வெள்ளை அங்கி அணிவித்து பேசுகையில், ‘மாணவ, மாணவிகள்  பழமையான புத்தகங்களை படிப்பதன் மூலம், இத்துறையில் உள்ள பல விஷயங்களை அறிந்து கொள்ளமுடியும்.

கால்நடை மருத்துவர்கள் கிராமத்துக்கு குறித்த நேரத்துக்கு தினமும் செல்லவேண்டும். அங்கு  கால்நடைகளுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளித்தால், சமுதாயத்தில் உரிய மரியாதை கிடைக்கும். படிக்கும் காலத்திலேயே இந்த பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவேண்டும்,’ என்றார்.கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்  மருத்துவமனை மோலாண்மைக் குழு உறுப்பினர் விஜயன், பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், செல்வராஜ், பழனிவேல், விஜயகுமார், கதிர்வேல், செல்வராஜ், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழக சிகிச்சைத்துறை தலைவர் இசக்கியல் நெப்போலியன் ஆகியோர் வாழ்த்தினர்.  

மாணவர் விக்னேஸ்வர் நன்றி கூறினார். கால்நடை பராமரிப்பு துறை நாமக்கல் மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் பேசுகையில், ‘கால்நடைகளுக்கு வைத்தியம் செய்வது மிகவும் கடினமாகும். அரசு பணியில் உள்ள கால்நடை மருத்துவர்களுக்கு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. கால்நடை பாதுகாப்பு திட்டம், கணக்கெடுப்பு, கோமாரி நோய் தடுப்பு முகாம்கள், இலவச ஆடு வழங்கல் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவே நேரம் சரியாக இருக்கிறது,’ என்றார்.

Tags : college principal ,villages ,arrival ,
× RELATED குடிநீர், சாலை வசதி இல்லை எனக்கூறி தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்