×

உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, டிச.18: விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர் நேற்று திருவண்ணாமலையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து திருப்பூர் மாவட்டம், புகலூரிலிருந்து சட்டீஸ்கர் மாநிலம், ராய்கர் வரை 800 கேவி மின்சாரம் எடுத்து செல்ல விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.பாதிக்கப்பட்ட விவசாயிகள், நில உரிமையாளர்கள் இணைந்து கடந்த மே மாதம் 6ம் தேதி ஈரோட்டில் கோரிக்கை மாநாடு நடத்தினர். பின்னர், கூட்டியக்கத்தை பேச்சுவார்த்தைக்கு அழைத்த மின்சார வாரியத்தினர் கோரிக்கைகள் பரிசீலனை செய்யாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்துடன் போலீசாரை வைத்தும் வருவாய் துறையினரை வைத்தும் மிரட்டி அவர்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

எனவே விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றக்கோரியும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர்.அதன்படி, திருவண்ணாமலை அருகே உள்ள தென்அரசம்பட்டு கிராமத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிராக விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் நேற்று தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பலராமன் முன்னிலை வகித்தார்.அப்போது, ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலத்திற்கு முறையான இழப்பீடு, உயர்மின் கோபுரங்கள் மற்றும் மின்பாதைகள் அமைந்துள்ள இடத்திற்கு ஆண்டு வாடகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இரண்டாவது நாளாக இன்றும்(செவ்வாய்) விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Tags : farmers association ,towers ,wait waiter ,Thiruvannamalai ,
× RELATED மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது...