×

வைத்தீஸ்வரன்கோவில் கோயிலார் வாய்க்காலை தூர்வார வேண்டும்

சீர்காழி,டிச.12: வைத்தீஸ்வரன்கோவில் கோயிலார் வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் முடவன் வாய்க்காலில் இருந்து கோயிலார் வாய்க்கால் பிரிந்து கரைமேடு, எடக்குடிவடபாதி. சாந்தப்புத்தூர் வழியாக சென்று தென்னலக்குடி உப்பனாற்றில் கலக்கிறது.  இந்த ஆற்றில் வரும் நீரை பயன்படுத்தி விவசாயிகள் சுமார் 800 ஏக்கரில் விவசாய பணிகளை செய்து வருகின்றனர். இந்த கோயிலார் வாய்க்கால் பாசன வாய்க்காலாகவும், வடிகால் வாய்க்காலாகவும் இருந்து வருகிறது. இந்த வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி, கொடிகள் மண்டி காணப்பட்டதால், வாய்காலில் தண்ணீர் செல்வது தடைப்பட்டு இருந்து வந்தது.  இந்நிலையில் வாய்க்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயிலார் வாய்க்கால் தூர்வாரப்பட்டது. ஆனால் முழுமையாக தூர்வாரப்படாததால் வாய்க்கால் முழுவதும் செடி, கொடி, கோரைகள் மண்டி காட்சி அளிக்கிறது. இதனால் தண்ணீர் வடிவதிலும், வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதிலும் சிரமம் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வரும் 15ம் தேதி வீசும் பெத்தாய் புயலின் போது மழை பெய்ய வாய்புள்ளதால் இந்த வாய்க்காலில் தண்ணீர் வடிவதில் சிரமம் ஏற்பட்டு வைத்தீஸ்வரன்கோவில் நகருக்குள் புகுந்து விடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.  உடனடியாக கோயிலார் வாய்க்காலை முழுமையாக தூர்வார வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vaitheeswarankoil ,
× RELATED சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் கார்த்திகை விழா