×

பெரியநெற்குணம் கிராமத்தில் மாட்டுத்தொழுவமாக மாறிய நூலகம்

சேத்தியாத்தோப்பு, டிச. 12: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பெரியநெற்குணம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வடக்கு தெரு குளக்கரை அருகில் நூலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த நூலகமானது கிராமமக்கள் நடப்பு உலக விஷயங்களை அறிந்து கொள்ளவும், பல்வேறு அன்றாட வாழ்வியல் நிகழ்வுக்கு பயனுள்ளதாகவும் மற்றும் பெரியநெற்குணம் கிராம பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்ளும் வகையிலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

ஆரம்பத்தில், நூலகம் திறக்கப்பட்டு சில நாட்கள் இயங்கிய நிலையில் பின்னர் அதிலுள்ள புத்தகங்கள் சரியான பராமரிப்பு இல்லாததால் நூலகம் பூட்டப்பட்டு இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நூலகம் எப்போதுமே பூட்டியே கிடப்பதால் தற்போது மாடுகளை கட்டும் தொழுவமாக மாறியுள்ளது. மேலும் சாணம் மற்றும் குப்பைகள் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி நூலகத்துக்கு அருகில் குடியிருப்பு மக்களுக்காக போடப்பட்ட போர்வெல்லும் பயன்பாடு இல்லாததால் இப்பகுதியில் உள்ளவர்கள் குடிநீர் தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆகையால் மாவட்ட நிர்வாகம் இந்த கிராம நூலகத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இதனருகில் உள்ள குடிநீர் போர்வெல்லையும் சரிசெய்து கொடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : coworker ,village ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் ஒரு கிராமம் ஒரு...