×

கடப்பதற்கு நீண்டநேரம் காத்திருக்கும் அவலம் சாத்தூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க வேண்டும்

சாத்துார், டிச.5: சாத்தூர்-இருக்கன்குடி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம், சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையில் சாத்தூர் ரயில் நிலையம் உள்ளது. இதனருகே ரயில்வே கேட் உள்ளது. இதை கடந்துதான் இருக்கன்குடி, நென்மேனி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை சாத்தூர் ரயில் நிலையம் வழியாக ஒரு நாளைக்கு 20க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து நின்று செல்கின்றன. இதனால், தினமும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இந்த ரயில் கேட் கதவு மூடி திறக்கப்படுகிறது.

இதை கடந்து தினமும் பள்ளி வாகனங்கள் உள்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கேட் அடைக்கும் நேரங்களில் கடக்க சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால், சாத்தூர் ரயில்வே பீடர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்காக சாத்தூர் வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், அவசர வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் ரயில் கேட் பாதை திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது.

எனவே, ரயில்வே நிர்வாகம் இந்தப் பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதையாவது அமைக்க வேண்டும் என, பொதுமக்களும், பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags : Sethur Railway ,cancellation ,passage ,
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...