×

மருத்துவர்கள் போராட்டத்தால் அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் அவதி

மதுரை, டிச. 5:மதுரை மாவட்டத்தில் மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள் மற்றும் மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் மெடிசன், சர்ஜரி, காது மூக்கு தொண்டை, எலும்பு முறிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் நேற்று புறநோயாளிகள் பிரிவுகளுக்கு வராமல், வார்டுகளிலிருந்து உள்நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும், மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகளுக்கு, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

உதவி மருத்துவர்கள் இல்லாததால், ஆயிரக்கணக்கான புறநோயாளிகளுக்கு வார்டுகளில் அட்மிஷன் போடாமல் நாளை வரும்படி கூறி அனுப்பப்பட்டனர். அவசர சிகிச்சை நோயாளிகள் வார்டுகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்ட அட்மிஷன் போடப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனை டீன் பொறுப்பு சண்முகசுந்தரம் கூறுகையில், ‘‘அரசு மருத்துவமனையில் 24 உதவிப் பேராசிரியர்கள், 5 பேராசிரியர்கள் புறநோயாளிகள் சிகிச்சையை புறக்கணித்தனர்.

இதனால், பட்டமேற்படிப்பு மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பகுதி மற்றும் அறுவை சிகிச்சைகள் வழக்கம்போல் நடந்தன. கையெழுத்து போடாதவர்கள், கைெயழுத்து போட்டு பணிக்கு வராதவர்கள், வார்டுகளில் பணியில் இல்லாதவர்களின் விபரம் குறித்து மருத்துவக்கல்வி இயக்குனகரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றார்.திருமங்கலத்தில் புறநோயாளிகள் அவதி
திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த 15 மருத்துவர்களும் நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், சிகிச்சைக்கு வந்து புறநோயாளிகள் நேற்று அவதிப்பட்டனர். காலை 7 மணிக்கு வரத்தொடங்கிய புறநோயாளிகள் மருத்துவர்கள் இல்லாமல் அவதிப்பட்டனர். பின்னர் மாவட்ட மருத்துவ அலுவலகத்திலிருந்து மருத்துவர் ஒருவர், சிகிச்சை அளித்தார்.


Tags : Doctors ,outpatients ,
× RELATED நாகர்கோவில் அருகே லெமூர் பீச்சில்...