×

ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் மணல் கடத்திய டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம் கிராம மக்கள் சாலை மறியலால் பரபரப்பு

ஆரணி, டிச.4: ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் மணல் கடத்திய டிராக்டர் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(26). இவர் நேற்று அதிகாலை 5.30 மணியளவில், தனது குழந்தையுடன் பைக்கில் மெயின்ரோட்டில் உள்ள டீக்கடைக்கு வந்தார். அப்போது, அவ்வழியாக மணல் கடத்தி சென்ற டிராக்டரின் பின்புற இரும்பு கதவு திடீரென திறந்து, பைக்கில் வந்த ஏழுமலை மீது மோதியது. இதில் நிலை தடுமாறிய ஏழுமலை தனது குழந்தையுடன் பைக்கில் இருந்து கீழே விழுந்தார். ஏழுமலைக்கு படுகாயம் ஏற்பட்டது.இருப்பினும், இதை கண்டு கொள்ளாத டிரைவர் டிராக்டரை வேகமாக ஓட்டிச்சென்றார். படுகாயம் அடைந்த ஏழுமலையை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மணல் கடத்தல் குறித்து தாசில்தார் கிருஷ்ணசாமி, விஏஓ அக்ஸாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று அதே கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கிராம மக்கள் சமாதானம் ஆகவில்லை. இதையடுத்து, டிஎஸ்பி செந்தில் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது கிராம மக்கள், செய்யாற்றில் இருந்து இரவு பகலாக லாரி, டிராக்டர், மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்படுகிறது. மணல் கடத்தும் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால் பலரும் விபத்தில் சிக்குகின்றனர். மணல் கடத்தல் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்ைல. இப்போதும் மணல் கடத்திய டிராக்டரால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, டிராக்டர் டிரைவரை கைது செய்ய வேண்டும்' என்றனர்.

அதற்கு டிஎஸ்பி செந்தில், டிராக்டர் டிரைவர், மணல் கடத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து, டிராக்டர் டிரைவர் ஆரணி புலவன்பாடியை சேர்ந்த சந்தோஷ்குமார்(21) என்பவரை போலீசார் கைது செய்து, டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். பின்னர், சந்ேதாஷ்குமாரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Arani ,village ,Thachur ,village tractor motel ,
× RELATED ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் ஆரணி...