×

மின்கேபிள் பதிக்கும் பணியால் குடிநீர் குழாய் உடைப்பு

ஈரோடு, நவ. 30: ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள மின்கேபிள் பதிக்கும் பணியால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 15 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள மின்கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஆங்காங்கே குழிகள் தோண்டப்பட்டு மின்கேபிள்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட சூரம்பட்டி மாரப்பா முதல் வீதியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாதாள மின்கேபிள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகத்தினர் சரி செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர். இதனால் மாரப்பா வீதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. குடிநீர் கிடைக்காமல் கடந்த 15 நாட்களாக பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மாநகராட்சி சூரம்பட்டி பகுதியில் மாரப்பா வீதியில் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள மின்கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டினார்கள். அப்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் 15 நாட்களாக தவித்து வருகிறோம். சமையல் செய்வதற்கும், மற்ற தேவைகளுக்கும் போர்வெல் மூலமாகவே தண்ணீர் எடுத்து வருகிறோம். சுத்தமான தண்ணீரை காசு கொடுத்து வாங்கி வருகிறோம். இந்த பிரச்சனை தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். உடைந்து போன குடிநீர் குழாயை சரிசெய்து சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்