×

தாதம்பட்டி - மீசலூர் இடையே அரைகுறையாக நிறுத்தப்பட்ட ரயில்வே தரைப்பால பணி விளைநிலங்களுக்கு செல்ல விவசாயிகள் அவதி

விருதுநகர், நவ.30: விருதுநகர் அருகே தாதம்பட்டியிலிருந்து மீசலூர் செல்லும் வழியில் ரயில்வே தரைப்பாலம் பணிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். விருதுநகர் அருகே உள்ள தாதம்பட்டி, மீசலூர் பகுதி மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். தாதம்பட்டி, மீசலூரை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தாதம்பட்டி மீசலூர் இடையே விருதுநகர்-செங்கோட்டை ரயில் வழித்தடம் செல்கிறது. இதனால் தாதம்பட்டியில் இருந்து மீசலூருக்கு விவசாயிகள் வண்டிப்பாதை வழியாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வந்தனர். இந்நிலையில் ஆளில்லா ரயில்வே கேட்டுகளை நிரந்தரமாக மூடும் வகையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தாதம்பட்டி ரயில்வே பாதையில் தரைப்பால பணிகள் துவங்கியபோது மீசலூர், தாதம்பட்டி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரயில்வே தரைப்பாலம் தேவையில்லை, வண்டிப்பாதையை பயன்படுத்த அனுமதிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால் ரயில்வே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. மேலும் கடந்த மாதம் பெய்த மழையில் ரயில்வே தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. விவசாயிகள் கூறுகையில், தரைப்பாலம் கட்டும்பணி ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. தரைப்பாலத்தை மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் கடந்து செல்லும் வகையில் 12.5 அடி ஆழத்தில் கட்ட வேண்டும். தற்போது விவசாய பணிகள் வேகம் பெற்றுள்ள நிலையில் பாலம் கட்டாமல் இருப்பதால் விளைபொருட்களை மறுபுறம் கொண்டு செல்ல முடியவில்லை. மாவட்ட நிர்வாகமும் ரயில்வே துறைக்கு அழுத்தம் கொடுத்து தரைப்பால பணியை விரைவாக முடிக்க ஆவண செய்ய வேண்டுமென தெரிவித்தனர்.

Tags : workshops ,
× RELATED 3 நகை பட்டறைகளில் வருமானவரி சோதனை