×

5 ஆண்டுகளாக பராமரிப்பின்றி வாகனங்கள் நிறுத்தும் இடமான கூடைப்பந்தாட்ட ஆடுகளம் அரியலூர் அரசு பள்ளி அவலம்

அரியலூர், நவ.30:  அரசு பள்ளியில் 5ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து அதிகாரிகள் வாகன நிறுத்தமாக மாறியது கூடைப்பந்தாட்ட ஆடுகளம்.  அரியலூர் மாவட்டத்தில் அதிகம் மாணவ,மாணவிகள் படிக்கும் பள்ளி அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி.இந்த பள்ளி வளாகத்தில் ஆண்கள்,பெண்கள் உயர் மற்றும் மேல்நிலை பள்ளி என தனித்தனியான பள்ளிகளும் இயங்கி வருகின்றது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார  பகுதிகளிலிருந்து வந்து சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் இந்த பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பள்ளிகளுக்கென விளையாட்டு மைதானம் பொதுவானதாகவே உள்ளது. அரசு உயர்நிலைப்பள்ளி பகுதியில்  இப்பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்தாட்ட ஆடுகளம் தரைக்கும் ஆடுகளத்திற்கும் இரண்டடி உயரம் காங்க்ரீட்டால்  அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது போதிய பராமரிப்பின்றி மண்ணுக்குள் புதைந்து காணப்படுகின்றது. மேலும் வலைக்கூடை அமைந்திருக்கும்  போர்டுகள் சேதமடைந்து சுமார் 5 வருடங்கள் ஆகிறது.  சுமார் 6 வருடங்களாக இந்த ஆடுகளம் தரையில் புதைந்தும், போர்டு உடைந்த நிலையில் உள்ளது. இதனை சரிசெய்யாமல் அப்படியே வைத்துள்ளனர்.மேலும், ஏதேனும் விழாக்கள் என்றால்  கலெக்டர் முதல் உயர் அதிகாரிகளின் வாகனங்கள்  நிறுத்துமிடமாகவே இந்த மைதானம் செயல்பட்டு வருகின்றது.இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  அலுவலகமும் இந்த பள்ளி வளாகத்திலேயே இயங்கி வருகின்றது .

அது போல் மற்ற விளையாட்டு மைதானத்தில் எவ்வித வசதிகளும் இல்லை, ,இந்த பள்ளியின் விளையாட்டு மைதானத்தின் அவலநிலையை பார்த்தாலே அரசு பள்ளியில் விளையாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்  என மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து பள்ளி,கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பள்ளி பெற்றோர்கள் சார்பாக நேரில் சந்தித்து புகார் மனு கொடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.  மாவட்ட நிர்வாகம் அரசுப்பள்ளியில் அனைத்து விளையாட்டு மைதனாங்களையும் சரி செய்ய வேண்டும் என விளையாட்டு வீரார்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

Tags : Ariyalur ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...