×

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்

 புழல், நவ. 30: காரனோடை பகுதியில் டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சோழவரம் காரணோடை முனிவேல் நகர் முதல் தெருவில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதற்கு ஆரம்பம் முதல் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இந்த கடையை திறப்பதற்காக நேற்று மதியம் 12 மணியளவில் ஊழியர்கள் வந்திருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முனிவேல் நகர், ஏரிக்கரை பகுதிகளை சேர்ந்த 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடை முன் திரண்டு, கடையை திறக்கக்கூடாது என்று கோஷங்கள் எழுப்பியபடி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தகவலறிந்ததும் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியல் செய்தவர்கள், ‘‘இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்’’ என்றனர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை கடையை திறக்க மாட்டோம்’’ என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : shop ,Tashmak ,
× RELATED செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்த 3 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்