×

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கொச்சுவேளி ரயிலாக நேற்றும் இயக்கம் இரு ரயில்களின் பெட்டிகள் இணைப்பு

நாகர்கோவில், நவ. 29:  சென்னை மண்டல ரயில்வே அதிகாரியின் உத்தரவை அமல்படுத்தாததால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கொச்சுவேளி ரயிலாக மாற்றப்பட்டு நேற்றும் இயக்கம் தொடர்ந்த நிலையில் இன்று (29ம் தேதி) முதல் இரு ரயில்களின் பெட்டிகள் இணைப்பு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் நேற்று மாலையில் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினமும் சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை கன்னியாகுமரி வந்து சேரும். பகல் நேரத்தில் இந்த ரயிலை நாகர்கோவில் கொண்டு வந்து பெட்டிகளை சுத்தம் செய்வது, தண்ணீர் பிடிப்பது போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்வார்கள். மாலையில் மீண்டும் கன்னியாகுமரி கொண்டு சென்று அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்படும். கடந்த நவம்பர் 15 முதல் இதில் மாற்றம் செய்யப்பட்டது. ரயில் கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்த பின்னர் நாகர்கோவிலில் இருந்து கொச்சுவேளி செல்லும் பயணிகள் ரயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் இயக்கப்படுகிறது. இந்த நடைமுறையால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் தாமதமானது. இது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அதிமுகவினர் ரயில் மறியல் போராட்டம், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து திமுக கூட்டணி கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் என பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ரயில்வேக்கு கடிதம் எழுதினார். தொடர் போராட்டங்களையடுத்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் கொச்சுவேளி பயணிகள் ரயிலுடன் இணைப்பது 28ம் தேதி முதல் ரத்து செய்ய தெற்கு ரயில்வே சென்னை மண்டல அதிகாரி திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார். இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று முதல் வழக்கமான நேரத்தில் புறப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதி செய்திருந்தார்.
ஆனால் திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் 10 நாட்கள் கழித்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளை கொச்சுவேளிக்கு இயக்கும் திட்டத்தை ரத்து செய்யலாம் என்றும், அதுவரை தற்போதுள்ள நிலையில் இயக்க முடிவு செய்தனர். இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் நேற்றும் கொச்சுவேளி பயணிகள் ரயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை அறிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட பயணிகள் பாதிக்கும் வகையில் திருவனந்தபுரம் கோட்டம் தொடர்ந்து இதுபோல் செயல்பட்டு வருவதால் குமரி மாவட்ட வழித்தடங்களை அதாவது கன்னியாகுமரி - திருவனந்தபுரம் 87 கி.மீ, நாகர்கோவில் - திருநெல்வேலி 74 கி.மீ என 161 கி.மீ தூரம் உள்ள ரயில்வே இருப்பு பாதையை மதுரை கோட்டத்துடன் உடனடியாக இணைப்பது மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு தீர்வை ஏற்படுத்தும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர். இந்தநிலையில் தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் ேகாட்டம் நேற்று மாலையில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில் இயக்க காரணங்களுக்காக பெட்டிகள் இணைப்பு மற்றும் பங்கீடு இரு ரயில்களுக்கு மேற்கொள்ளப்பட்டது. ரயில் எண் 56318/56317 நாகர்கோவில் - கொச்சுவேளி நாகர்கோவில் பாசஞ்சர் ரயிலானது ரயில் எண் 12633/12634 சென்னை எழும்பூர் கன்னியாகுமரி/ சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளுடன் இணைப்பாகவும், ரயில் எண் 56316/56311 திருவனந்தபுரம் - நாகர்கோவில்/ திருவனந்தபுரம் பயணிகள் ரயில்களானது. ரயில் எண் 16343/16344 திருவனந்தபுரம்     மதுரை, நிலம்பூர் திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இணைப்பாகவும் இயக்கப்பட்டது நவம்பர் 29ம் தேதி (இன்று) முதல் திரும்ப பெறப்படுகிறது. மேலும் ரயில் எண்: 56311 திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.55க்கு பதில் 6.50 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு காலை 8.55க்கு பதில் 8.50க்கு வந்து சேரும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் ஏதுமின்றி புறப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று முதல் இயக்கப்படாது: பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவிலில் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: கொச்சுவேளி பயணிகள் ரயிலுக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் நாளை(இன்று) முதல் இயக்கப்படாது. நான் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி கேட்டபோது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கொச்சுவேளி ரயிலாக நாளை (இன்று) முதல் இயக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர். எனவே கொச்சுவேளி ரயிலுக்கு கன்னியாகுமரி ரயிலின் பெட்டிகள் சேர்க்கப்பட்டு இயக்கப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மீண்டும் போராட்டம்:  சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ
சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ கூறியதாவது: நேற்று (நேற்று முன்தினம்) காலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சுவேளிக்கு செல்வது ரத்து என்று சென்னை மண்டல உயர் அதிகாரி அறிவித்துள்ளார். மாலையில் கீழ் உள்ள அதிகாரி தொடர்ந்து இயக்க உத்தரவு போடுகிறார். அதன் அடிப்படையில் கொச்சுவேளிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இது போராட்டகாரர்களை புண்படுத்துவது போன்று அமைந்துள்ளது. எனவே மீண்டும் கொச்சுவேளிக்கு செல்வதை ரத்து செய்ய வேண்டும். இல்லை என்றால் கூட்டணி கட்சிகளோடு கலந்துபேசி போராட்டம் தொடரும். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கறுப்புக்கொடி: வக்கீல் ராதாகிருஷ்ணன்
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது கடமையை சரிவர செய்யாததால் மீண்டும் ரயில் பெட்டிகள் கொச்சுவேளிக்கு செல்கிறது. ஒரு வாரத்திற்குள் பிரச்னைக்கு தீர்வு கண்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தொடர்ந்து கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து உரிய நேரத்தில் புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது காங்கிரஸ் கட்சி சார்பில் கறுப்புக்கொடி காட்டப்பட்டும். தொடர்ந்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உண்ணாவிரதம், பந்த் போராட்டத்தை இறுதிகட்ட போராட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் அவர்கள் நாகர்கோவிலில் ரயில் நிலைய அதிகாரிகளை சந்தித்தும் மனு அளித்தனர்.

ரயிலில் அமர்ந்து போராடுவோம்: எஸ்.ஏ.அசோகன்
குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் இன்று முதல் கொச்சுவேளிக்கு செல்லாது என தகவல்கள் வெளியாகின. அதற்கு மாறாக இன்று (நேற்று) காலை 7.50 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் பெட்டிகளை கொண்டு கொச்சுவேளி பயணிகள் ரயில் இயக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் உத்தரவிட்டும் கூட திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் அதனை அமல்படுத்த மறுக்கின்றனர். எனவே நாளை (இன்று) காலை 7.50 மணிக்கு கன்னியாகுமரி ரயிலின் பெட்டிகளை கொண்டு கொச்சுவேளி பயணிகள் ரயிலை இயக்கினால் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari Express ,coaches ,
× RELATED பாண்டியா பாவம்…தேற்றுகிறார் போலார்டு