×

50 நாட்களை கடந்தும் விளைச்சல் இல்லை வேட்டு வைத்த ஒட்டு ரக வெங்காயம் திருச்சுழி பகுதி விவசாயிகள் வேதனை

திருச்சுழி, நவ. 29: திருச்சுழி பகுதியில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட ஒட்டு ரக வெங்காயம், 50 நாட்களை கடந்த நிலையிலும், விளைச்சல் இல்லாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். திருச்சுழி அருகே உள்ள வடக்குநத்தம், தெற்குநத்தம், போத்தம்பட்டி, தொப்பலாக்கரை உள்ளிட்ட இருபது மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் ஒட்டு ரக வெங்காயம் பயிரிட்டுள்ளனர். ஆனால், 50 நாட்களை கடந்த நிலையிலும் செடிகளில் வெங்காயம் விளைச்சல் இல்லை. இதனால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம்   கேட்டால், அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். வெங்காயச் செடிகளில் நோய் பாதிப்பால், ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.   

இது குறித்து வடக்கு நத்தம் விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் பெரும்பாலான விவசாய நிலங்களில் ஒட்டு ரக வெங்காயம் பயிரிட்டுள்ளோம். பயிரிட்டு 50 நாட்களை கடந்தும் போதுமான விளைச்சல் இல்லை. வெங்காயம் அழுகிய நிலையில் குந்தாணி, தலைவிரிச்சான் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
வெங்காய செடிகளில் வெங்காயம் பருமன் ஆகாமல் உள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ரூ.பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED கலெக்டர் அலுவலகம் முன் ஊதியம் கோரி தர்ணா போராட்டம்