×

முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் தயார் சரிபார்க்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு 2018 ஜனவரி முதல் தேதி நிலவரப்படி

வேலூர், நவ.29: 2018ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி துணை ஆய்வாளர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்களுக்கு முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான தேர்ந்தோர் பட்டியலை சரிபார்க்கும்படி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பணித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றிய முதுகலை ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தலைமை ஆசிரியர்களாக அடுத்த சில நாட்களில் கவுன்சிலிங் மூலம் பதவி உயர்வு பெற உள்ளனர். முன்னதாக உயர்நிலைப்பள்ளிகளுக்கு கவுன்சிலிங் மூலம் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய பதவி உயர்வுகள் இதனால் காலியான மற்றும் காலியாகும் இயற்பியல், கணக்கு, வணிகவியல், பொருளியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், ஆங்கிலம், தமிழ் முதுகலை ஆசிரியர்களின் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி துணை ஆய்வாளர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்களின் பட்டியல் 1.01.2018 தேதி நிலவரப்படி தயாரிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தயாரிக்கப்பட்ட இப்பட்டியலை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் மாநகராட்சி, நகராட்சி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து இறுதி செய்ய வேண்டும். மேலும் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களும் பட்டியலை சரிபார்த்து கையொப்பமிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை மாநகராட்சி, நகராட்சி, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், பள்ளி துணைஆய்வர்கள், வட்டார வளமைய பயிற்றுனர்கள் என முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் 208 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இயற்பியல் பாடத்துக்கு 14 பேரும், கணக்கு பாடத்துக்கு 69 பேரும், வணிகவியல் பாடத்துக்கு 4 பேரும், வேதியியல் பாடத்துக்கு 22 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வணிகவியல் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட வெவ்வேறு பாடங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 13 பேர், பொருளியில் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட வெவ்வேறு பாடங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 3 பேர், பொருளியல் பாடத்துக்கு 2 பேர், ஆங்கிலம் முதுகலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட வெவ்வேறு பாடங்களை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள் 20 பேர், தாவரவியல் பாடத்துக்கு 16 பேர், விலங்கியல் பாடத்துக்கு 16 பேர், தமிழ் பாடத்துக்கு 29 பேர், ஆங்கில பாடத்துக்கு 10 பேர் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chief Executive Officer ,post graduate instructors ,
× RELATED நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும்...