×

தொடர் போராட்டங்களால் 13 நாட்களில் முடிவை மாற்றியது ரயில்வே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் இன்று முதல் கொச்சுவேளிக்கு மாற்றப்படாது அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் நாகர்கோவில் வராது

நாகர்கோவில், நவ.28: கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை கொச்சுவேளி பயணிகள் ரயிலுக்கு இயக்குவதை ரத்து செய்து ரயில்வே சென்னை மண்டல அலுவலக அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இந்த மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. ரயில் எண்: 12633 சென்னை- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.20க்கு கன்னியாகுமரி வந்து சேருகிறது. இவ்வாறு வந்த ரயிலின் காலி பெட்டிகள் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் பகல் முழுவதும் நிறுத்தி வைக்க இடம் இல்லாத காரணத்தால் நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு காலிபெட்டிகளாக கொண்டுவந்து நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த ரயில் பெட்டிகளில் தண்ணீர் நிரப்பி சுத்தம் செய்துவிட்டு மாலை 3 மணியளிவில் காலியாக கன்னியாகுமரிக்கு கொண்டு சென்று அங்கிருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையில் கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டது. இதனையடுத்து கன்னியாகுமரிக்கு வந்து சேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்பெட்டிகள் நாகர்கோவில் இருந்து காலை 7.55 மணிக்கு கொச்சுவேளி செல்லும் ரயில் எண்: 56318 பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டது. இவ்வாறு செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸின் ரயில் பெட்டிகள் ரயில் எண்: 56317 கொச்சுவேளி - நாகர்கோவில் பயணிகள் ரயிலாக கொச்சுவேளியில் இருந்து பகல் 11.40 மணிக்கு புறப்பட்டு பகல் 1.55 மணிக்கு நாகர்கோவில் வந்தடைந்தது. பின்னர் இந்த ரயில் கன்னியாகுமரிக்கு கொண்டு சென்று மாலை 5.20 மணிக்கு வழக்கம்போல் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலாக புறப்பட்டு செல்ல வேண்டும் என்று மாற்றப்பட்டது.

ஆனால் கொச்சுவேளி - நாகர்கோவில் பயணிகள் ரயில் காலதாமதமாக வந்ததால், சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் காலதாமதமாக இயக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த ரயில் பெட்டிகள் கழுவி சுத்தம் செய்ய, நீர் நிரப்ப போதிய காலம் இல்லாத காரணத்தால் துர்நாற்றத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 15ம் தேதி முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் தாமதமாக புறப்பட்டு செல்வது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவித்தன. அதிமுகவினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். திமுக, காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் ஐந்து எம்.எல்.ஏ.க்கள் உள்பட கட்சியினர் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் கொச்சுவேளிக்கு மாற்றப்படுவதை ரத்து செய்வது தொடர்பாக ரயில்வேக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், இது தொடர்பாக ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து பேச முயன்று முடியவில்லை என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே தொடர் போராட்டங்களையடுத்து இன்று (28ம் தேதி) முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கொச்சுவேளி பயணிகள் ரயிலுடன் இணைத்து இயக்கும் நடவடிக்கையை ரத்து செய்ய தெற்கு ரயில்வே சென்னை மண்டல அதிகாரி திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதனுடன் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கழுவி சுத்தப்படுத்த நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகளும் ரத்து செய்ய தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று (28ம் தேதி) முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் கொச்சுவேளிக்கு செல்லாது, மேலும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் நாகர்கோவிலுக்கு வராது. இதன் காரணமாக 13 நாட்களுக்கு பின்னர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் வழக்கமான நேரத்தில் சென்னை புறப்பட்டு செல்லும் என்று எதிபார்க்கப்படுகிறது.

Tags : Railway Kanyakumari Express ,Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...