×

டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் சவேரியார்புரம் கிராமத்தை அரசு பஸ்கள் புறக்கணிப்பு

சாத்தான்குளம், நவ. 27:  சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு 65ஏ, 65பி, 65இ மற்றும் தடம் எண்165 ஆகிய அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் பேய்க்குளம், சவேரியார்புரம், முனைஞ்சிபட்டி வழியாக சென்று வருகின்றன. சவேரியார்புரத்தில் சுமார் 2 ஆயிரம்பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள புனித அந்தோணியார்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இவ்விழாவில் சுற்றுவட்டார மக்கள் மற்றும் வெளியூரில் வசித்துவரும் இப்பகுதியை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்பது வழக்கம்.

 இதனிடையே சவேரியார்புரத்தில் நடந்த மோதலில் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சை வழிமறித்து டிரைவர் மற்றும் கண்டக்டரை சிலர் தாக்கினர். இைதயடுத்து கடந்த 15 நாட்களாக அரசு பஸ்கள், சவேரியார்புரம் வழியாக செல்லாமல் மீரான்குளம் மற்றும் மாற்றுப்பாதையாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சவேரியார்புரம் மக்கள் பஸ்வசதியின்றி பல கிலோ மீட்டர் நடந்தோ அல்லது ஆட்டோவில் சென்றோ செங்குளம் சென்று பின்னர் அங்கிருந்து நெல்லை மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சவேரியார்புரத்தில் புனித அந்தோணியார்திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் கடந்த 16 நாட்களாக அரசு பஸ்கள், சவேரியார்புரத்தை புறக்கணித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு பஸ்களை மீண்டும் சவேரியார்புரம் வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையில் மண்அரிப்பு
  இதேபோல் சாத்தான்குளத்தில் இருந்து விஜயராமபுரம், சிறப்பூர் வழியாக திசையன்விளைக்கு தடம் எண்165 எக்ஸ் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிறப்பூர் விலக்கில் சாலை பழுதடைந்ததால் பஸ் போக்குவரத்து மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து சிறப்பூர் விலக்கில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை உயரமாக அமைக்கப்பட்டதால் தரை தளம் பள்ளமாகவும் சாலை உயரமாகவும் அமைக்கப்பட்டதால் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதையடுத்து. சாலையின் இருபுறங்களிலும் மணல் நிரப்பி சாலை உயர்த்தப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெய்த மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு மீண்டும் சாலை மட்டும் உயரமாக காணப்படுகிறது. இதனால் பஸ்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பஸ்கள் தஞ்சைநகரம் வழியாக மாற்றுப்பாதையில் செல்வதால் இப்பகுதி மக்கள் பஸ்வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Controller Attacks ,village ,Sawyerarpur ,Government ,
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!