×

போக்குவரத்து பாதிப்பு எம்ஜிஆர் சிலை உடைப்பு கண்டித்து அதிமுகவினர் மறியல்

பெரணமல்லூர், நவ.27: பெரணமல்லூர் அருகே எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிமுகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர் பஸ் நிறுத்தம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. இந்த சிலை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை அவ்வழியாக சென்றவர்கள் எம்ஜிஆர் சிலையின் கை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிலைக்கு அருகில் ஒரு கடப்பாரையும் கிடந்தது. இதனால் ஆசாமிகள் கடப்பாரையால் சிலையை உடைத்து சேதப்படுத்தி இருந்தது தெரிந்தது.

இதுகுறித்த தகவலறிந்த ஏராளமான அதிமுகவினர் அங்கு திரண்டனர். எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, கொருக்காத்தூர் பஸ் நிறுத்தம் அருகே காலை 6 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து மறியல் நடந்ததால் பள்ளி வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொண்டன.

தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி குணசேகரன், பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதாகர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சமரசத்தை ஏற்க மறுத்த அதிமுகவினர், பள்ளி வாகனம் மற்றும் பால் வேனுக்கு மட்டும் வழிவிட்டனர். அந்த வாகனங்கள் சென்றதும் மீண்டும் மறியலை தொடர்ந்தனர். பின்னர், எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : MGR ,
× RELATED எம்ஜிஆர் நகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற பெண் உட்பட 5 பேர் கைது