×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் தூய்மை பணி சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மதிப்பூதியம்

திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலை தீபத்திருவிழாவின்போது தூய்மைப் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி அண்ணாமலையார் கோயில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் வழங்கி கவுரவித்தார்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி ஆம்பூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, அரக்கோணம், வந்தவாசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு, திருவண்ணாமலை நகரில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தீபத்திருவிழாவின்போது துப்புரவு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு திருவண்ணாமலை நகராட்சி சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம் வரவேற்றார்.விழாவில், 645 துப்புரவு பணியாளர்களுக்கு அண்ணாமலையார் கோயில் பிரசாதம் மற்றும் மதிப்பூதியம் ₹1000 ஆகியவற்றை கலெக்டர் வழங்கி கவுரவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், திருவண்ணாமலை தீபத்திருவிழாவின்போது நீங்கள் சிறப்பான முறையில் துப்புரவு பணியாற்றினீர்கள். உங்களது பணி மகத்தானது. உங்களது பணியில் கடுகளவும் குறையில்லை. நீங்கள் செய்த பணி அண்ணாமலையாருக்கு செய்த பணியாகும். நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றி திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பெருமை தேடி தந்துள்ளீர்கள். உங்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.இதில் நகர்நல அலுவலர் பிரதாப், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரா.ஆல்பர்ட், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் விஜயக்குமார் நன்றி கூறினார்.

Tags : Cleaning ,sweepers ,festival ,Thiruvannamalai Deepathirivu ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!