×

உத்திரமேரூர் அருகே எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளிடம் குறை கேட்பு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த கருவேப்பம்பூண்டி மற்றும் மணல்மேடு பகுதிகளில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் விவசாயிகள் அருள் மற்றும் தேவன் ஆகியோர் பாதிக்கப்படும் விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்த உள்ள நிலங்களையும் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து அருள் நிருபர்களிடம் கூறியதாவது:உத்திரமேரூர் பகுதியில் நெற்பயிர், கரும்பு ஆகியவை அதிகளவில் விளையும் நிலங்களை 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்த உள்ளனர். எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்படும் விவசாயிகளுக்கு நிலத்தைக் கொடுக்க விருப்பம் இல்லை. அவர்களை கட்டாயப்படுத்தி நீங்களாக நிலத்தைக் கொடுத்தால் நல்லது. எதிர்ப்பு தெரிவித்தால் நிலமும் கையகப்படுத்தப்படும், இழப்பீடும் வழங்கப்படமாட்டாது என்று மிரட்டி வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மக்களுக்கு ஆதரவாக பேசாமல் நிலம் கையகப்படுத்தப்படும், சாலை அமைக்கப்படும் என்று ஒப்பந்ததாரர் போல் பேசி வருகிறார்.

தமிழக அரசு 8 வழிச்சாலை பகுதியில் ஒரு தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்கும் என்று கூறுகிறது. ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு என்ன இழப்பீடு வழங்குகின்றனர். நாங்கள் விவசாயிகளை தனித் தனியாக அவர்கள் வீடுகளில் சந்தித்து கருத்துக்களைக் கேட்டு வருகிறோம். பாதிக்கப்பட்ட 5 மாவட்ட மக்களின் கருத்துக்களை முழுமையாகக் கேட்டு இந்தத் திட்டத்துக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறோம் என்றார்.




Tags : roads ,Uttirameroor ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...