×

பூட்டியே கிடக்கும் விஏஓ அலுவலகம் 30 கி.மீ அன்றாடம் அலையும் மக்கள்

வருசநாடு, நவ.23: கடமலைக்குண்டு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடப்பதால் சான்றிதழ்களைப் பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடமலைக்குண்டு கிராமத்தில் மேகமலை கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. மேகமலை கிராம அலுவலகத்திற்கு உட்பட்ட கோரைஊத்து, கோம்பைதொழு, தும்மக்குண்டு, வாலிப்பாறை, காந்திகிராமம், அண்ணாநகர், கோடாலிஊத்து, தண்டியகுளம்,போன்ற பகுதிகளிலிருந்து மலைக்கிராம மக்கள் சான்றிதழ்கள் பெற 30 கி.மீ தூரம் உள்ள கடமலைக்குண்டு கிராமத்திற்கு பஸ்சில் பயணம் செய்து கிராம நிர்வாக அலுவலகம் வருகின்றனர். ஆனால், இந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் மேகமலை கிராமமக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். பட்டா மாறுதல், இறப்பு, பிறப்புபதிவு, அடங்கல் போன்றவற்றை பெற முடியாமல் தினசரி அலைகின்றனர்.

இதுகுறித்து மேகமலையைச் சேர்ந்த சின்னன் கூறுகையில், கடமலை - மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 4 வருவாய் கிராம நிர்வாக அலுவலகங்கள் உள்ளன. இதில் மூன்று அலுவலகத்திற்கு தனியாக விஏஓ உள்ளனர். ஆனால் மேகமலை வருவாய் கிராமத்திற்கு மட்டும் இதுவரையும் தனியாக அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இதனால் கூடுதல் பொறுப்பாக மயிலாடும்பாறை விஏஓ கவனித்து வருகிறார். இதனால் அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக சிரமமடைந்து வருகின்றனர். எனவே, மேகமலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு விஏஓவை நியமிக்க தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : office ,VOO ,
× RELATED மழையால் நிரம்பிய கிணறு