×

காற்றுடன் சாரல் மழையால் நீலகிரியில் கடும் குளிர்

ஊட்டி, நவ. 23:நீலகிரியில் நேற்று முன்தினம் முதல் மழை பெய்து வரும் நிலையில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் ேநற்று முன்தினம் முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி, குன்னூர். கோத்தகிரி, மஞ்சூர் போன்ற பகுதிகளில் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் ஊட்டியில் காலநிலையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டு கடும் குளிர் நிலவியது. இதனால், பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ முதல் எல்லநள்ளி வரையிலும், அதேபோல், லவ்டேல் சந்திப்பு முதல் நுந்தளா மட்டம் வரையிலும் கடும் மேக மூட்டம் காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

நேற்று முன்தினம் மாலை முதல் கடும் மேக மூட்டம் மற்றும் தொடர் மழையால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். இதனால் வாகன ஓட்டுநர்கள் திணறினர். மழை மற்றும் குளிரால் வெளியில் வர முடியாமல் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முடங்கினர். மழை காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மழை காரணமாக ஊட்டி ஏரியில் சில மணி நேரம் மிதி படகு சுவாரி நிறுத்தப்பட்டது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 19 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 11 டிகிரி செல்சியசுமாக பதிவாகியிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் பெய்த மழையின் அளவு மி.மீ.,ல்: கேத்தி 8, கோத்தகிரி 11, நடுவட்டம் 5, ஊட்டி 20, கல்லட்டி 10, கிளன்மார்கன் 15, கோடநாடு 18, கெத்தை 2.

Tags : winters ,Nilgiris ,
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...