×

கடலூரில் கடல் சீற்றம்: மீன்பிடி தொழில் பாதிப்பு

கடலூர், நவ. 22: கடந்த ஒரு மாதமாக மீன் பிடித்தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்ப்டடுள்ளது.
கடல் சீற்றம், கனமழை, கஜா புயல் ஆகியவற்றின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவில் மீன்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் கடல் சீற்றம் அடையத் தொடங்கியது. கடலூர் தாழங்குடா மீனவர்கள் 5 பேர் படகு கடல் சீற்றத்தில் சிக்கி மூழ்கியது. இவர்கள் அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் ரேணுகா உத்தரவின் பேரில் உதவி இயக்குனர் கங்காதரன் மேற்பார்வையில் மீன்வளத் துறை அலுவலர்கள் அனைத்து மீனவ கிராம தலைவர்கள், படகு உரிமையாளர்கள் ஆகியோருக்கு செல்போன் வாட்ஸ் அப் வாக்கி டாக்கி மூலம் கடல் சீற்றமாக இருப்பதால் 22ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே கடலூர் மாவட்ட கடல் பகுதிகளில் நேற்று காலை 2 மீட்டர் உயரத்திற்கு அலை எழும்பியதால் கடல் மேலும் சீற்றமடைந்து 9 மீட்டர் உயரத்திற்கு அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி பல இடங்களில் கரையைத் தாண்டின.
கடலூர் தாழங்குடா தேவனாம்பட்டினம், சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு அக்கறை கோரி, ராசாபேட்டை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டதால் மீனவர்கள் உடனடியாக டிராக்டர்கள் உதவியுடன் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்கள் படகுகளை கயிறுகட்டி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று வைத்தனர்.

கடல் சீற்றம் கஜா புயல் கனமழை ஆகியவற்றால் கடலூர் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டு மீனவர்களின் குடும்பங்கள் பட்டினியால் வாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க வேண்டும், ஒரு குடும்பத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டுமென்று என்று மீனவர் வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு மீனவர் பேரவை. மீனவர் விடுதலை வேங்கைகள் உள்ளிட்ட பல்வேறு மீனவர் அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.

Tags :
× RELATED பொருட்கள் வாங்கி கொண்டு வந்த தாய் விபத்தில் பரிதாப பலி