×

ஆட்டோ டிரைவர் கொலை வழக்கு வருமானம் பாதித்ததால் தீர்த்துகட்டியதாக சக டிரைவர்கள் 5 பேர் வாக்குமூலம்

பூந்தமல்லி, நவ. 22: ஆட்டோ டிரைவர் கொலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். வருமானம் பாதித்ததால் அவரை வெட்டிக்கொன்றதாக சக ஆட்டோ டிரைவர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ்தரப்பில் கூறப்படுகிறது. பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சத்தியகிரி ராவ் (30). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி பிரியா (26), லோகேஷ் (5), சர்வேஷ் (3) மற்றும் 2 மகன்கள் உள்ளனர். சத்தியகிரி ராவ், ஆவடி ஆட்டோ ஸ்டாண்ட் சங்க செயலாளராக இருந்துள்ளார். இவர்  ஸ்டாண்டில் உள்ள மற்ற ஆட்டோ டிரைவர்களுடன் அடிதடி தகராறில் ஈடுபட்டு  வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இவர் மீது சோழவரம், அயனாவரம் காவல்  நிலையங்களில் கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்  பூந்தமல்லி போலீசில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்து வந்ததும் தெரிய  வந்தது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் பாரிவாக்கம், கங்கை அம்மன் கோயில் குளம் அருகே தனது நண்பர்களுடன் சத்தியகிரி ராவ் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு ஆட்டோவில் வந்த 7 பேர் கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.

இப்புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை போலீசார், ஆட்டோ டிரைவர்களான அம்பத்தூர் அடுத்த ஒரகடம் பகுதியை சேர்ந்த பூபாலன் (27), சென்னீர்குப்பத்தை சேர்ந்த ஷபீர் (24), பாலாஜி (37), ஆவடியைச் சேர்ந்த அஜீத் (எ) ஜெகன்நாதன் (25), திருமுல்லைவாயலை சேர்ந்த ஜார்ஜ் (எ) விஜய்பாபு (30) ஆகிய 5 பேரை நேற்று முன் தினம் இரவு  கைது செய்தனர். விசாரணையில், ஆவடி பகுதியில் சத்தியகிரி ராவ் ஆட்டோ ஓட்டி வந்ததால், மற்ற டிரைவர்களுக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வாய்த்தகராறு முற்றியதில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. அவரை தீர்த்து கட்டினால்தான் தங்களுக்கு நிரந்தர வருவாய் கிடைக்கும் என்ற ஆத்திரத்தில் அவரை கொலை செய்தோம் என 5 பேரும் ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இக்கொலை தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : drivers ,colleagues ,
× RELATED பெண்ணைக்கொன்று தண்ணீர் தொட்டியில்...