×

நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஓராண்டு கழித்து பழைய இடத்துக்கே திரும்பி வந்த டாஸ்மாக் கடைகள்

பெரம்பலூர், நவ.15:  பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்த டாஸ்மாக் கடைகள் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு ஓராண்டு கழித்து பழைய இடங்களுக்கே திரும்பின. பெரம்பலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில்  34 இடங்களில் இருந்து வருகிறது. இதில் 6 இடங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட பார்கள் உள்ளன. ஆனால், அனைத்து கடைகளோடும் கள்ளத்தனமாக போலீசாரின் ஆதரவில், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் ஆதரவில் கள்ள பார்கள் அமோகமாக நடந்து வருகின்றன. இவை தவிர அந்தந்தக் காவல்நிலைய போலீசாரின் தயவில் சந்துக் கடைகள் என மாவட்டஅளவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலை வைத்தும், அரசு அனுமதியின்றி தயாரிக்கப்பட்டு போலியான மதுபானங்களை வாங்கி வந்து விற்கப்படும் வியாபாரம் களைகட்டி நடந்து வருகிறது.
     
 இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கு இடையூராக செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள் கடந்த ஆண்டு தமிழக அரசால் நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் இடமாற்றம் செய்யப்பட்டது. இதில் பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டை ஆக்கிரமித்து பஸ் ஸ்டாண்ட் உட்புறமும், நுழைவுவாயில், பஸ்கள் வெளியேறும் பகுதி என புது பஸ் ஸ்டாண்டில் மட்டுமே 3 இடங்களில் டாஸ்மாக் கடைகள் நடந்து வந்தன. அதேபோல் ஆத்தூர் சாலையில் சுடுகாடு எதிரே ஒரு டாஸ்மாக் கடையும் இயங்கி வந்தன. இந்த டாஸ்மாக் கடைகளும் கடந்த ஆண்டு மார்ச் 31ம்தேதியோடு மூட நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டதால் ஏப்ரல் 1ம்தேதி முதல் இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் புது பஸ் ஸ்டாண்டில் பயணிகள் நிம்மதியாக இருந்து வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் நேற்று நகர்ப்புறத்தில் இயங்கி வந்த 4 டாஸ்மாக் கடைகளும் அதே இடங்களில் திறக்கப்பட்டு ஜரூராக இயங்கி வருகிறது. அவற்றை பஸ் ஸ்டாண்டிலிருந்து 4 ரோடு செல்லும் வழியிலோ அல்லது வேறு இடங்களிலோ மாற்றினால் பயணிகள் நிம்மதியடைவார்கள். இல்லாவிட்டால் குடிமகன்கள் அட்டகாசம் பஸ் ஸ்டாண்டுக்குள் தினமும் அத்துமீறல் சம்பவங்களாக அரங்கேறி வரும் என்பதில் ஐயமில்லை.  

Tags : shops ,Tashmak ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே ரெட்டம்பேடு...