×

கொள்ளிடம் ஒன்றிய 42 ஊராட்சிகளில் பொக்லைன், ஜெனரேட்டர் மணல் மூட்டைகள் தயார்

கொள்ளிடம் நவ.15: கஜா புயல் கரையை நெருங்கி வருவதை ஒட்டி முன்னெச்சரிக்கை பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் தெரிவித்தார். நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் அன்பரசு கூறுகையில், கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளிலும் தலா 1 பொக்லைன் இயந்திரம், 1 ஜெனரேட்டர் வீதம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பலத்த காற்று வீசும் பட்சத்தில் மரங்கள் முறிந்து விழுந்தால் உடனடியாக அகற்றுவதற்கு இயந்திரமும் மரம் அறுக்கும் இயந்திர வாளுடன் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஆட்கள் தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு அங்கு ஊராட்சி செயலாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 2 நாட்களுக்கு ஊராட்சி தலைமையகத்தில் ஊழியர்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 ஊராட்சிகளுக்கு ஒரு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் வீதம் பணி அமர்த்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொள்ளிடம் அருகே கூழையாறு, புதுப்பட்டினம், கொடியம்பாளையம், தாண்டவன்குளம், திருமுல்லைவாசல் ஆகிய கடற்கரையோரமுள்ள கிராமங்களில் புயல் வெள்ள பாதுகாப்பு மையங்கள் தூய்மை செய்யப்பட்டு மக்கள் தங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. மேலும் கொள்ளிடம், ஆச்சாள்புரம், அளக்குடி, முதலைமேடு, கோபாலசமுத்திரம், ஆணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றின் கரையோரமுள்ள கிராமங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பொதுமக்களை தங்க வைக்கவும் உணவு வழங்கவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2 பொக்லைன் இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் கஜா புயலை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED மயிலாடுதுறையில் 226 பள்ளி வாகனங்கள் தணிக்கை: கலெக்டர் தலைமையில் நடந்தது