×

தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க ஊட்டி, கூடலூரில் கண்காணிப்பு கோபுரம்

ஊட்டி, நவ. 2: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், கடை வீதிகள் போன்ற பகுதிகளில் குற்றங்களை தடுக்க இம்முறை ஊட்டி மற்றும் கூடலூரில் வாட்ச் டவர் (கண்காணிப்பு கோபுரம்) அமைக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்களே உள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பொருட்கள், ஆடைகள் வாங்க தற்போது மும்முரம் காட்டி வருகின்றனர். தனியார் தேயிலை தோட்டங்கள், தனியார் நிறுவனங்கள், போனஸ் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற பகுதிகளில் மக்கள் புத்தாடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் வாங்கும் பணிகளை துவக்கியுள்ளனர். இது போன்ற சமயங்களில் பிக்பாக்கெட், செயின் பறிப்பு, புத்தாடைகளை திருடி செல்லுதல், வாடிக்கையாளர்கள் போன்று வந்து கடைகளில் ஆடைகள் மற்றும் பொருட்களை திருடி செல்லுதல் போன்ற சம்பவங்கள் அரங்கேறும். இதனை தடுக்க மாவட்ட காவல்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தற்போது இப்பணிக்கு ஊட்டி நகரில் பணியாற்றும் போலீசார் தவிர 25 ஆயுதப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் 25 வீதம் 150 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எந்நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். குறிப்பாக மக்கள் கூடும் கடை வீதி, மத்திய பஸ் நிலையம், மார்க்கெட் போன்ற பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும், குற்றங்களை தடுக்கும் பொருட்டு இம்முறை முதன் முறையாக ஊட்டி மற்றும் கூடலூர் நகரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளது.  ஊட்டியில் கமர்சியல் சாலை, மார்க்கெட் ஆகிய பகுதிகளிலும், கூடலூர் பஜார் பகுதியிலும் வாட்ச் டவர்கள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ooty ,gathering ,Diwali ,Kolarur Surveillance Tower ,
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்