×

குறிஞ்சிப்பாடி பகுதியில் வேகமாக பரவி வரும் காய்ச்சல்

குறிஞ்சிப்பாடி, நவ. 1: குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு, பன்றி, வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு புறநோயாளிகளாக ஆயிரக்கணக்கானோர் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.குறிஞ்சிப்பாடி மற்றும் அயன்குறிஞ்சிப்பாடி, ரெட்டிச்சாவடி, கல்குணம், பூதாம்பாடி, கண்ணாடி, ஆடூர்அகரம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூர், கள்ளையங்குப்பம், குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், பாச்சாரப்பாளையம், கீழூர் உள்ளிட்ட சுமார் 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு தான் வரவேண்டும். அல்லது கடலூருக்கு செல்ல வேண்டும்.

குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப் பிரிவு, தீவிர குழந்தைகள் நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, பச்சிளம் குழந்தை பிரிவு, நுண்கதிர் பிரிவு, பரிசோதனை கூடம் என சகல வசதிகளும் உள்ளது. இருந்தும் புறநோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உள்நோயாளிகளை கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.புறநோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இருக்கும் மருத்துவர்களும் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை. பணி முடியும் முன்னரே சென்று விடுகின்றனர். குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களை நியமிக்க வேண்டும். பணியில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதையும், பணி நேரம் முடியும் வரை சிகிச்சை அளிப்பதையும் கண்காணிக்க வேண்டும். மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வவலர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

Tags : area ,Kurinpatti ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது