×

பழவேற்காட்டில் ₹27 கோடி செலவில் நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி மறுப்பு: மீன்வளத்துறை விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் துறை நிராகரிப்பு

சென்னை, அக். 31: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் உள்ள கடல் முகத்துவாரத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். பழவேற்காடு ஏரியும், கடலும் சேரும் முகத்துவாரப் பகுதி கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் மீனவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக, பழவேற்காடு ஏரியின் முகத்துவாரமானது ஒவ்வொரு பருவமழை காலத்தின்போதும் முற்றிலும் தூர்ந்து, பருவமழைக்கு பின்னர் தானாகவே வேறொரு இடத்தில் முகத்துவாரம் உருவாகிறது. இப்படி நிரந்தரமாக முகத்துவாரம் இல்லாத காரணத்தால் ஏரியின் மீன்வளம் குறைந்து மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முகத்துவாரத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு தமிழக அரசு பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வார ₹27 கோடி நிதி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை தூர்வாரும் பணிகள் தொடங்கப்படவில்லை.

இதனை கண்டித்து பழவேற்காட்டில் மீனவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே, நிரந்தரமாக முகத்துவாரம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்தது. அதன்பிறகு மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், தமிழக மீன்வளத்துறை சார்பில் ₹27 கோடி செலவில் ஐஐடி சென்னை உதவியுடன் நிரந்தர முகத்துவாரம் அமைக்க ஒரு திட்டத்தை உருவாக்கி மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதிக்காக விண்ணப்பித்தது. இத்திட்டத்தின்படி, முகத்துவாரத்தின் இடதுபக்கம் 160 மீ, வலதுபக்கம் 150 மீட்டருக்கு பெரும் பாறைகளை கொட்டி சுவர் அமைக்கவும், இந்த சுவர்களுக்கிடையே 3 மீட்டர் ஆழத்திற்கு முகத்துவாரம் தூர்வாரி ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதன் மூலம் எல்லா பருவ காலங்களிலும் ஏரியின் முகத்துவாரம் கடலோடு திறந்திருக்கும். மொத்தமாக 20 லட்சத்து 5 ஆயிரத்து 150 க்யூபிக் மீட்டர் மணல் அகற்றப்பட இருந்தது. இரண்டு பக்க சுவர் எழுப்புவதற்கு 1 லட்சத்து 27ஆயிரத்து 900 டன் பாறைகள் பயன்படுத்தப்படும் என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக மீன்வளத்துறையின் விண்ணப்பத்தை சுற்றுச்சூழல் நிபுணர் குழு நிராகரித்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் துறை கூறும் காரணம்.
*  கடலோர ஒழுங்காற்று மண்டல விதிகளின்படி அனுமதி வழங்க முடியாது.
* அதிகளவில் கடல் மணலை தூர்வாரவிருப்பதால் சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கை 2006ன் கீழ் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும்.
* இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஒட்டு மொத்த சூழல் அமைப்பும் அழிந்து விடும்.
* பழவேற்காடு ஏரி சர்வதேச சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என்பதால் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது எனக்கூறியுள்ளது.

Tags : estates ,
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்...