×

டிஇஓ பொறுப்பு விவகாரம் பள்ளிக்கல்வி இயக்குனரிடம் தலைமை ஆசிரியர்கள் புகார்

நாமக்கல், அக்.30: நாமக்கல்லில்,  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு டிஇஓ பொறுப்பு வழங்கப்பட்டது  குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள்,  சென்னையில் பள்ளிக்கல்வி இயக்குனரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக, மின்னக்கல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல்(56) கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் உஷா, இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதற்கு நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் 2 அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து, முதன்மை கல்வி அலுவலரை நேரில்  சந்தித்து முறையிட்டனர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு தான், டிஇஓ பொறுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க முதன்மை கல்வி  அலுவலர் உஷா மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்,  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலரின் நடவடிக்கைக்கு  ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று, தமிழ்நாடு  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில தலைவர் சீனிவாசன் (சென்னை),  பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் (தஞ்சாவூர்), பொருளாளர் கணேசன் (விருதுநகர்),  அமைப்பு செயலாளர் உதயக்குமார் (நாமக்கல்) மற்றும் சங்க நிர்வாகிகள், நேற்று  சென்னை சென்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வரமுருகனை நேரில்  சந்தித்து, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷாவின் நடவடிக்கை குறித்து புகார் அளித்தனர்.  

அப்போது அவரிடம் அளித்த கோரிக்கை மனுவில், ‘மாவட்ட  கல்வி அலுவலர் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியலில், ஆர்.புதுப்பாளையம் அரசு  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உதயக்குமார் முதலில் இருக்கிறார். ஆனால், அவரை  தவிர்த்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை, நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலராக சிஇஓ  நியமித்தது, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடையே அதிருப்தியை  ஏற்படுத்தியுள்ளது. மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி என்பது,  உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பதவி உயர்வு பணியிடமாக இருக்கிறது.  எனவே, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கே, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு வழங்க வேண்டும்,’ என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில  பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கையின்  நியாயத்தையும், உணர்வையும் பள்ளிக்கல்வி இயக்குனர் புரிந்து கொண்டார். உரிய  நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இயக்குனர் மீது முழு நம்பிக்கை  உள்ளது,’ என்றார்.


Tags : DEO ,chief teachers ,school ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி...