×

சத்துணவு ஊழியர்கள் தேனியில் சாலைமறியல் 742 பேர் கைது

தேனி, அக். 30: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் சாலைமறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் 742 பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதிம் வழங்க வேண்டும். காலிப்பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும். பெண் ஊழியர்களுக்கு 9 மாத மகப்பேறு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த வாரம் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் நேற்று முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தத்தில் சத்துணவு பணியாளர்கள், உதவியாளர்கள் இறங்கியுள்ளனர்.  தேனி மாவட்டத்தில் மொத்தம் 704 சத்துணவு மையங்கள் உள்ளன. இம்மையங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் என மொத்தம் 1673 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியதையடுத்து தேனி மாவட்டத்தில் 1254 பேர் வேலைக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சத்துணவு மையங்களில் உணவு சமைக்க முடியாமல் தனியார் தொண்டு நிறுவனத்தினரைக் கொண்டு சமையல் செய்யப்பட்டது. பல இடங்களில் சமையல் செய்யப்படாத நிலை ஏற்பட்டது. வேலைநிறுத்தத்தையொட்டி நேற்று தேனி கம்பம் சாலை பள்ளிவாசல் பகுதியில் இருந்து சத்துணவு ஊழியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோஷமிட்டவாறு வந்து தேனி நேரு சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முகமதுஅலிஜின்னா, தேனி கிழக்கு கிளைச்செயலாளர் உடையாளி பேசினர். இதனால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தேனி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 742 பேரை கைது செய்தனர்.

சமையல் செய்த ஆசிரியர்கள்
உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஊராட்சிகளில் 80 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதனால் மாணவ, மாணவியருக்கு தட்டுப்பாடு இல்லாமல் உணவு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக உத்தமபாளையம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மலர்விழி, சுரேஷ் (கிராம ஊராட்சி) ஆகியோர் அனைத்து சத்துணவு மையங்களுக்கும் நேரடியாக சென்றனர்.
 அங்கு ஸ்டிரைக்கில் ஈடுபடாத அமைப்பாளர்கள், பணியாளர்களை கொண்டு சாப்பாடு சமைக்க ஏற்பாடு செய்தனர். சில பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு இல்லாத நேரத்தில் மகளிர் குழுவினரை கொண்டு சத்துணவு சமைத்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மலர்விழி, சுரேஷ் கூறுகையில், `` அனைத்து மையங்களுக்கும் நேரடியாக சென்று நாங்களே இதற்கான ஏற்பாடுகளை செய்தோம். சில மையங்களில் ஆசிரியர்களே நேரடியாக தாமாக முன்வந்து சமையல் செய்தது வரவேற்கத்தக்கது’’ என்றனர்.

Tags : nuns ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிஷப்புக்கு...