×

தகுதி அடிப்படையிலேயே விரிவுரையாளர் பணி நீக்கம்

ஊட்டி,அக். 26:   ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் கவுரவ விரிவுரையாளராக ஜெய்சிங் என்பவர் பணிபுரிந்தார். இவர் விரிவுரையாளராக பணியாற்ற தேவையான எம்.பில்., மற்றும் நெட் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளார். இந்நிலையில், நடப்பு ஆண்டிற்கு பணியாற்ற வேண்டிய கவுரவர விரிவுரையாளர்களின் பட்டியலை தயார் செய்து அனுப்பும் படி கல்லுாரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது. இதில், சம்பந்தப்பட்ட கல்லூரியில் குறைந்த ஆண்டுகள் பணியாற்றியவரை பணியில் இருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டது. மேலும், ஒவ்வொரு துறையிலும் எத்தனை கவுரவ விரிவுரையாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற அளவீடும் செய்யப்பட்டது. இந்நிலையில், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் தமிழ் துறையில் 6 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், 5 பேரை மட்டுமே பணியமர்த்த உத்தரவிட்டுள்ளது. இதனால், ஒருவரை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு கல்லூரி நிர்வாகம் தள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் குறைந்த ஆண்டு மட்டுமே ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றிய ஜெய்சிங் என்பவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத ஜெய்சிங், தான் ஏற்கனவே பணியாற்றிய கல்லூரிகளின் பணி அனுபவத்தை காரணம் காட்டியும், படிப்பை காரணம் காட்டியும் தன்னை பணியமர்த்தும்படி வலியுறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், எந்த முன் அறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் ஜெய்சிங் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.  ஊட்டி பி1 போலீசார் பேச்சு நடத்தியதால் அவர், நேற்று முன்தினம் இரவு தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
 இந்நிலையில் நேற்று காலை மீண்டும் போராட்டம் நடத்தப் போவதாக கூறி ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு வந்தார். ஆனால், அவரை கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இது குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், தமிழ் துறையில் 5 கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே பணியமர்த்த வேண்டும்.

மீதமுள்ளவர்களை பணி நீக்கம் செய்ய கல்வியில் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, குறுகிய காலம் மட்டுமே பணியாற்றியவர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால், ஜெய்சிங் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதில், நாங்கள் எந்த விதிமீறல்களிலும் ஈடுபடவில்லை. தகுதியானவர்களுக்கு பணி வழங்கியுள்ளோம். தகுதியற்றவர்களை பணி நீக்கம் செய்துள்ளோம். ஆனால், என் மீதும், கல்லூரி நிர்வாகத்தின் மீதும் ஜெய்சிங் வீணான பழி சுமத்தி வருகிறார், என்றார்.

Tags : lecturer ,
× RELATED கல்லூரி பேராசிரியர்கள் தேசிய...