×

ஓய்வூதியர்களின் மருத்துவ நல நிதிக்காக காப்பீட்டு தொகை ரூ.638.94 கோடி வழங்கல் கருவூலத்துறை ஆணையர் தகவல்

மன்னார்குடி, அக்.26: ஓய்வு பெற்ற அலுவலர்கள்  சங்க 60வது ஆண்டு வைர விழா மன்னார்குடியில் நடைபெற்றது.  சங்கத்தின் மாநில தலைவர் கணேச சங்கர் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் மாணிக்கம் வரவேற்றார். விழாவில் தமிழக அரசின் முதன்மை செயலரும், கணக்குகள் மற்றும் கருவூலங்கள் துறையின் ஆணையருமான தென்காசி ஜவகர் ஐஏஎஸ், திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ்.  கருவூலம் மற்றும் கணக்குத்துறை திருச்சி  மண்டல  இணை இயக்குனர் பழனிச்சாமி, மாவட்ட கருவூல அலுவலர் லலிதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
 இதில் ஐஏஎஸ் அதிகாரி தென்காசி ஐவகர் பேசுகையில், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக பேசினார். 80 வயது நிறைவடைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியத்திற்கு வயது குறித்து அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஒய்வூதியர்கள் பெற்று வரும் மருத்துவ நல நிதி கடந்த ஜூன் மாதமே முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் மருத்துவ நல நிதி 4 ஆண்டுகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக சிறப்பு நோய்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை கூடுதலாக மருத்துவ சிகிச்சை பெறலாம்.  இதற்காக  ரூ.638.94 கோடி மருத்துவ காப்பீட்டு தொகை ஓய்வூதியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.  ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 64 ஆயிரம் பேர் பொதுத்துறை வங்கிகளில் ஓய்வூதியம் பெற்று வந்ததை கடந்த செப்.1ம் தேதி முதல் அரசு கருவூலங்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியர்கள் தங்களுக்கான அடையாள அட்டைகளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ள நட வடிக்கை எடுக்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 16,584 ஒய்வூதியர்கள்  அட்டைகளை பெற்று பயனைடைந்துள்ளனர்.
 வாழ்நாள் நிலுவை மற்றும் ஓய்வூதிய நிலுவை தொகை வழங்குவதற்கான நிதி அதிகார உச்சவரம்பு கடந்த மார்ச் முதல் கருவூல அலுவலருக்கு ரூ. 1.50 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் எனவும், கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் தேவை என்றால் அரசிடமிருந்து அனுமதி பெற்று வழங்கலாம்.  மேலும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வருடாந்திர நேர்காணலுக்கு கருவூலகத்திற்கு வர முடியாதவர்களுக்கு கடந்த ஆண்டு முதல்  ஜீவன் பிரமான் திட்டம் மூலம் வாழ்நாள் சான்று வழங்கலாம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் மூலம் ஏராளமான  ஓய்வூதியர்கள் பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
 பின்னர் ஓய்வு பெற்ற அலுவலர்கர்கள் சங்க வைர விழா மலரை கருவூலகங்கள் துறை ஆணையர்  ஐவகர் வெளியிட கலெக்டர் நிர்மல்ராஜ் பெற்றுக்கொண்டார். ஆர்டிஓ பத்மாவதி, தாசில்தார் ஸ்ரீதேவி சிவானந்தம் உள்ளிட்ட  அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சங்கத்தின் மன்னை வட்ட தலைவர் ராஜகோபாலன், செயலாளர் மகாதேவன், பொருளாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் செய்திருந்தனர். மாநில பொருளாளர் முத்துகுமரவேலு நன்றி
கூறினார்.

Tags : insurer ,retirees ,
× RELATED சென்னை மாநகர காவல் துறையில்...