×

கூட்ட நெரிசலால் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் கூடுதல் பஸ்கள் இயக்க கிராமத்தினர் வலியுறுத்தல்

திருப்புத்தூர், அக்.25: திருப்புத்தூர் அருகே கீழ்சிவல்பட்டி-ராங்கியம் வழிகாக பொன்னமராவதி வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதனால் கூடுதல் பஸ் வசதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இப்பகுதியை சுற்றியுள்ள இளையாத்தங்குடி,  ஆவிணிப்பட்டி, சேவினிப்பட்டி, கீரணிப்பட்டி, ராங்கியம், செவ்வூர், ஆத்திரம்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் தினந்தோறும் கீழச்சிவல்பட்டிக்கு வந்து செல்கின்றனர்.

மேலும் உயர் கல்வி படிப்பவர்கள் கிராமங்களிலிருந்து வந்து பின்னர் கீழச்சிவல்பட்டியில் இருந்து திருப்புத்தூர், காரைக்குடி, திருமயம், புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கிராமங்களுக்கு செல்ல சில அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டுமே உள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து வரும் தனியார் பஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு கீழச்சிவல்பட்டிக்கு வருகின்றனர்.

பின்னர் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் வேறு வழியில்லாமல் படிக்கட்டில் தொங்கியவாறு தங்களது ஊர்களுக்கு பயணிக்கின்றனர். பஸ் படிக்கட்டில் ஒரு கையில் பஸ் கம்பியை பிடித்தவாறு வெகுநேரம் செல்கின்றனர். ஆபத்தை அறியாமல், அபாயகரமான பயணங்களை தினந்தோறும் இந்த கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே விபத்துகள் ஏற்படும் முன் பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மற்றும் மாலைகளில் இப்பகுதிகளுக்கு கூடுதலான பஸ்களை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stops ,bus stand ,
× RELATED சென்னை பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் தகவல் பலகை!!