×

ஆலங்குளம், வி.கே.புரம், பாபநாசத்தில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்

ஆலங்குளம், அக். 25:  ஆலங்குளம், வி.கே.புரம், பாபநாசம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கொசு ஒழிப்பு உள்ளிட்ட சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பகலில் வெயிலும், மாலையில் மழையும் என மாறி மாறி காணப்படுவதால் பொதுமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட சீசன் நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு ஆலங்குளம் அடுத்த குறிப்பன்குளம் இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவன் முத்துவேல் ராஜன் (16), வடக்கு காவலாக்குறிச்சியை சேர்ந்த கற்பகவள்ளி (19), ஆலங்குளம் நந்தவனகிணறு தெருவை சேர்ந்த பாலமுருகன் மகன் 5ம் வகுப்பு மாணவனான மகேந்திரன் (10), செல்வராஜ் மகள் எம்சிஏ பட்டதாரி மரிய ரோஸ்லின் (25), குருவன்கோட்டையை சேர்ந்த சிறுமி கீர்த்திகா ஆகியோர் பலியான நிலையில், தற்போது வேகமாக பரவி வரும் காய்ச்சலால் இப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

காய்ச்சல் தடுப்பு பணிக்கு போதிய மஸ்தூர் பணியாளர் இல்லாதபோதும், சுகாதார துறை சார்பில் ஆலங்குளம் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலப்பு, வீடு வீடாக டெங்கு தடுப்பு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்தாண்டு டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஆலங்குளம் பேரூராட்சி சார்பில் 60 முதல் 90 மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபடுத்தபட்டனர். தற்போது ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11, 12, 3, 2 ஆகிய வார்டுகளில் காய்ச்சலின் தீவிரம் அதிகரித்த போதிலும் சுமார் 30க்கும் குறைவான பணியாளர்களே பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மர்ம காய்ச்சல் கண்டறியப்பட்ட இடங்களில் டெங்கு புழு ஒழிப்பு புகை அடிக்கப்படுகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனையிலும் காய்ச்சலால் சிகிச்சைக்கு ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். பள்ளிகளில் ஆலங்குளம் அரசு சித்த மருத்துவர் சுப்புலட்சுமி தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஹரிஹர சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் கங்காதரன், யோகா மற்றும் இயற்கை மருத்துவர் நீலவேணி ஆகியோர் சிறப்பு முகாம்கள் நடத்தி நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். ஆலங்குளம் பகுதியில் அசுர வேகத்தில் பரவும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதேபோல் வி.கே.புரம் மற்றும் பாபநாசம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வி.கே.புரம் மற்றும் அகஸ்தியர்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சலுக்காக கடந்த இருநாட்களில் ஏராளமானோர் சிகிச்சை எடுத்து வருகின்றனர். வெளிநோயாளிகளாக அனைவரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சுகாதார மேற்பார்வையாளர் விநாயகமூர்த்தியிடம் கூறுகையில், தட்பவெப்ப மாற்றத்தின் காரணமாக சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இது சாதாரண காய்ச்சல்தான். ஓரிருநாட்களில் குணமாகிவிடும். உள்நோயாளிகள் யாரும் கிடையாது, என்றார்.இதனிடையே வி.கே.புரம் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் ஆணையாளர் பொன்னம்பலம் உத்தரவின்பேரில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் கூறினார்.பணகுடி பேரூராட்சியில் நிலவேம்பு குடிநீர் வழங்கல் பணகுடி பேரூராட்சி பகுதியில் காய்ச்சல் பரவலை தடுக்க, கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சங்கர் கூறுகையில், பணகுடி பேரூராட்சி பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்க வீடு, வீடாக ஆய்வு நடந்து வருகிறது. தண்ணீர் தேங்குவதை தடுக்க பணியாளர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். தற்போது மழை காலம் துவங்கி உள்ளதால் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பேரூராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குளோரின் கலந்து தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அதேபோல் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியும் தொடர்ந்து நடைபெறும், என்றார்.

Tags : spread ,Alankulam ,VK Tower ,Papanasam ,
× RELATED மொபட் மீது லாரி மோதி முதியவர் பலி