×

பெட்ரோல் பங்க் அமைக்கும் பணி விவர அறிக்கை அனுப்ப வேண்டும் 5 சிறை கண்காணிப்பாளர்களுக்கு ஏடிஜிபி உத்தரவு நன்னடத்தை கைதிகளால் நடத்த திட்டமிட்டுள்ள

வேலூர், அக்.25: நன்னடத்தை கைதிகளால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சிறைத்துறை பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகள் குறித்து விவர அறிக்கை அனுப்ப வேண்டும் என்று வேலூர் உட்பட 5 சிறை கண்காணிப்பாளர்களுக்கு ஏடிஜிபி அசுதோஷ் சுக்லா உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில் 9 மத்தியச் சிறைகள், 9 மாவட்டச் சிறைகள், 95 துணைச் சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், 12 சிறுவர் சீர்திருத்த பள்ளிகள் என மொத்த 138 சிறைகள் உள்ளது. இவற்றில் சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.மத்திய சிறைகளில் உள்ள நன்னடத்தை கைதிகள் மூலம் ஷூ, சீருடை, சிறை பஜார், விவசாயம், பேக்கரி, நாப்கின் தயாரிப்பு போன்றவை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தை பின்பற்றி நன்னடத்தை கைதிகள் மூலம் பெட்ரோல் பங்க் தொடங்கி நடத்த சிறைத்துறை முடிவு செய்தது.அதன்படி, சென்னை புழல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, பாளையங்கோட்டை, வேலூர் உள்பட 9 இடங்களில் பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக வேலூர், புழல், பாளையங்கோட்டை, கோவை, புதுக்கோட்டை ஆகிய 5 இடங்களில் பெட்ரோல் பங்க் திறப்பதற்கான நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டது.

அதன்படி, பெட்ரோல் பங்க் அமைப்பதற்கான இடம், தடையில்லா சான்று, வங்கியில் தனிக்கணக்கு, ஜிஎஸ்டி எண் போன்ற நடைமுறைகள் முடிவடைந்து, கடந்த செப்டம்பர் மாதம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில், வேலூர், புழல், கோவை, பாளையங்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய 5 பெட்ரோல் பங்க் பணிகள் குறித்து சிறைத்துறை ஏடிஜிபி அசுதோஷ்சுக்லா, சிறை கண்காணிப்பாளர்களிடம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பெட்ரோல் பங்க் பணிகள் சில இடங்களில் காலதாமதமாக நடைபெற்று வருவதாக புகார் வந்துள்ளன. இதையடுத்து பெட்ரோல் பங்க் அமைக்கும் பணிகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.பணிகள் விரைவாக முடிக்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு, பெட்ரோலிய நிறுவன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய சிறையில் உள்ள பேக்கரி அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

Tags : prison supervisors ,detainees ,
× RELATED பயிற்சி முடித்துள்ள காவலர்கள்...