×

கும்மிடிப்பூண்டி அடுத்த சாலை கிராமத்தில் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி, அக்.25: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சி சாலை கிராமத்தில் செயல்படும் இறால் பண்ணைகளை அகற்றக் கோரி நேற்று பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட சாலை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் மல்லிகை, நெல், நிலக்கடலை, கிழங்கு, எள், கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இறால் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு இப்பகுதியில் முப்போகம் விளைச்சலை கண்ட விவசாயம் நாளுக்கு நாள் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால், நிலத்தடி நீரை மாசுபடுத்தும் இறால் பண்ணைகளை அகற்ற கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

இந்நிலையில், பொறுமை இழந்த கிராம மக்கள் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோடு சேர்ந்து அவர்களது ரேஷன் அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைத்து கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இறால் பண்ணைகளை அகற்றும் வரை காத்திருப்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து பள்ளி மாணவர்கள், விவசாயிகளுடன் ஊர்வலமாக அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்தனர். இதில், சிபிஐ மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ஜெ.அருள். புதிய ஜனநாயக தொழிலாளர் நிர்வாகிகள் சுதேஷ்குமார், யுகேந்தர், சிபிஐ நிர்வாகிகள் சரவணன், சண்முகவேல், கஜேந்திரன், துரைசாமி, ஜெகந்நாதன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ தேசிய குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி பேசும் போது, விவசாயத்தை நாசமாக்கும் இறால் பண்ணைகள் அகற்றப்பட்டு விவசாயத்தை காப்பது அரசின் கடமை என்றார். அதன்பிறகு, ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டாட்சியர் நந்தகுமார், வட்டாட்சியர் மதன்குப்புராஜ், டிஎஸ்பி ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் வேலன், இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையத்து கிராம மக்கள் மாலை 6 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : People siege ,Vatatsar ,road village ,
× RELATED வடக்கு சாலைக்கிராமத்தில் அம்மன்...